- பேசுகிறேன்
ஒவ்வொருவருக்குள்ளும்
ஒரு விருப்பம் மறைந்திருக்கிறது
அதைப் பற்றிய பிழைகளோடு
அறைகள் என்றால் வீடு
வீடு முழுக்க காற்றைப் போல்
காலம் நிறைந்திருக்கிறது
என் எண்ணங்களைக்
கசக்கிப் பிழிந்து
ரசித்துச் சுவைத்தேன்
கரும்பின் சக்கையைத்
துப்பியபடி சாற்றைக் குடித்தேன்
நான் நினைத்ததைச் சரியாகப்
பேசுகிறேனா என்று தெரியாதபோது
என்னைத் தவிர
எனக்கு வேறு வழியில்லை
தோன்றுவதை நம்பி
நான் பேசுகிறேன்
அதுவும் ஒரு உண்மை என்பதால்
அனைவரும் அதைக் கடந்து போகிறார்கள்
அனைத்துவிதமான குரல்களை
நூலைப்போல் நெய்து
ஒரு துணியெனத் தயாரித்து
அதை நான் அணிந்து கொண்டேன்
துளையிட்டு உள்ளே போய்
மீண்டும் துளையிட்டு உள்ளே போய்
நான் சேகரிக்கும் அனுபவங்களைப்
பற்றி உன்னிடம் பேசுகிறேன்
2. செயல்
நான் என் விடுதலையைச்
சிக்கித் தவிக்கும்
சிந்தனையிலிருந்து மீட்டெடுக்கிறேன்
வேறுவழியின்றி அனைத்து
திசைகளில் இருக்கும்
கடல் போல் வெளியில்
கானகத்தில் அலையும்
மனிதனின் அன்றாட
தேவைகளில் கடந்து போகிறது
காலை மாலையென ஒரு நாள்
இதுகாறும் நான் பயணித்த
பாதைகளின் தடங்கள்
என் கட்டுப்பாட்டில்
இல்லாமல் போக
என் நினைவுகளில் மூழ்கி
முத்தென எடுத்தேன்
ஒரு சாத்தியத்தைச்
சக்கரம் போல்
சுழலும் காலம்
எல்லோரையும் கலைத்துப் போட்டது
கண்ணுக்குத் தெரியாத
கனவுகளில் புரியாததின் தூரம்
இன்னும் கூடுகிறது
