திருட்டு ராஜ்யம்


வளவ. துரையன்

இந்தக் காலத்தில்
ஒரே ஒரு ஊர்ல
என்று ஆரம்பித்தால்

சிறுவர்கள் ராஜா
கதை வேண்டாமென்று
அடம் பிடிக்கிறார்கள்

ராஜாக்களின்
சண்டையும் சரசமும்
இன்று ரசிக்க முடியவில்லையாம்

திருடர்களின் கதைதான்
சிறுவர்க்கும் வேண்டுமாம்

திருடர்கள்
வேறு வேறு வேடங்களில்
திடீரென்று வருவதும்

நமக்குத் தெரியாமல்
நம்மைக் கொள்ளையடிப்பதும்
சிறுவர்களுக்குப்
பிடித்திருக்கிறது.

அவர்களும் அத்தொழிலையே
விரும்புகிறார்கள்

திருடர் இப்பொழுது
திருடிக் கொண்டதெல்லாம்
பெரியவனாகி நாங்களும்
திருடர்களாகித்
திருடிவிடுவோம் என்கிறார்கள்

ஆக

இது திருடர்கள் ராஜ்யம்