யார்?
வாகை மரத்தின் கீழ்க் கிளையிலிருந்து
கரைந்தது காகம்
முன்பெல்லாம் விருந்து எனச் சொன்ன அம்மா
தாளடி சென்று நெல் மணி அளந்து
நெஞ்சு வலியுடன் வீடு திரும்பி
காணாமல் போன அப்பா
வந்திருப்பதாகச் சொன்னாள்.
பார்வைகள்
தென்றல் எனும் தொட்டிலிலே
தெவிட்டாத தீந்தமிழால் பண்
இசைத்துப் பார்த்து நிற்கும் அது
அன்புப் பார்வை
சீரான வெற்றியினைச் சார்ந்து நிற்க-நல்
சாதனைகள் புரிந்து வரும் ஆசையிலே
மிதந்து வரும் இதுவோ
துடிக்கும் பார்வை
அசைந்தாடும் மலர் கண்டு
அகத்திலொரு அசைவின்றி
புறத்தே மொய்க்கும் இதுவோ
காமப் பார்வை
கண்னோடு கண் நோக்கி
மண்ணினை மறந்து நிற்கும்
விஞ்சையான கள்ளப் பார்வை
காதல் பார்வை
கருத்தொடு கருத்திசைய
உருவெடுத்து உடையுடுத்து
நிற்கின்ற ஓர் பார்வை
அகப் பார்வை
சொல்லோடு பொருள் கூட
பொருளோடு சுவையாட
எழிலோடு வந்ததிந்த
இசைப் பார்வை
சிரம் தாழ்த்தி வணங்கி நின்று
சிரமம் தீர்க்க வேண்டி என்றும்
சீர் அருட்பா பாடிடும்
பக்திப் பார்வை
மெய்யடியார் தாள் பணிந்து
உளமுருகும் அன்புடனே
தரை பார்த்து நிற்கும் இது
பணிவுப் பார்வை
இரந்து வாழும் நிலமையினால்
கல் மனத்தைப் புகழ்ந்து பாடி
பாமரமாய் நிற்கும் இது
பசிப் பார்வை
ஆறாத துயரினிலே அழுத் கண்ணீர்
வற்றாத வேதனை தனிலே
ஏங்கி ஏங்கி வாடும் இது
பிரிவுப் பார்வை
கையிரண்டும் இணைந்து பேச
உயிர் மெல்லும் இச்சையுடன்
கண்ணோரம் மறைந்து வரும் பார்வை
அரசியல் பார்வை
பல விதமான பார்வைகளில்
சிலவற்றைச் சொல்லி வைத்தேன்
தவறிருப்பின் வேண்டுகிறேன் ஒரு
மன்னிப்புப் பார்வை
