நினைவின் சாளரங்கள்/அதங்கோடு அனிஷ் குமார்

நினைவின் சாளரங்கள்/அதங்கோடு அனிஷ் குமார்

நீண்ட
இடைவெளிக்குப் பிறகு
புல்லின் இதழ்களிலிருந்து பனித்துளிகள்
நழுவும் நேரம்.

நினைவுப் பூக்களைச் சுமந்தபடி
அந்த மரத்தடிக்கு வந்தேன்.

வானம்
மழைப் பூக்களை
அள்ளி வீசிய
அந்த அந்தியில்
கிளைகளே
குடைகளாய் நின்ற
மரத்தடியில்
உன்
மூச்சுக் காற்றின்
கதகதப்பில்
குளிர் காய்ந்த வேளையில்
என்
கண்கள்
வாசித்த
காதல் கடிதத்தை
நீ படித்த
நொடியில்
வானம்
மின்னல் ஒளிஅனுப்பி
புகைப்படம்
எடுத்து
வைத்துக் கொண்டது.

இப்போதும்
உன் மூச்சின்
கதகதப்பு
நினைவின்
சாளரங்கள் திறந்தபடி
மெல்ல என் மீது
கவிகிறது.

எனக்குத் தெரியாமல்
உன் பெயரை
உச்சரிக்கும்
உதடுகளின் அசைவை வைத்த
கண் வாங்காமல் பார்க்கும்
என் மகளுக்கு
எப்படி மொழிபெயர்ப்பது நம்மில்
வாழும் காதலை.