கல்யாண்ஜி கவிதை

தொட்டிச் செடி அவ்வப்போது
துளிர்த்துக்கொண்டிருக்கிறது.
பருவம் பாராமல்
உதிர்ந்துகொண்டே இருக்கிறது
சிவப்புப் பூ.
பால்காரக் குவளை சிந்திய
பாலை நக்கிவிட்டு
அற்புதமாகப் பார்க்கிறது
குட்டி போட்டு
மடி தொங்கும் மணி.
சுத்திகரிக்க வரும் மூக்கம்மா
கூடைப் பக்கத்தில்
விட்டுப்போன குழந்தை
பேசுகிற பாஷை
எப்போதும் உயரத்திலேயே
இருக்கிறது.
சுற்றிலும்
நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது.
பார்க்கவிடாமல் வாழ்க்கை
நெற்றியில்
சுருங்கிக் கனக்கிறது.

சூரியனை
ஆற்றங்கரை மணலை
தொட்டாற்சுருங்கிச் செடியை
பாசஞ்சர் ரயிலின்
அற்புத இரைச்சலை
பட்டாம்பூச்சியை
தொலைத்துவிட்டு
நாற்காலிக் கால்களில்
நசுங்கிக் கிடக்கிறது
சோற்றுக்கலையும் வாழ்க்கை.

2 Comments on “கல்யாண்ஜி கவிதை”

  1. உண்மை பளாரென அறைகிறது. ‘சோற்றுக்கலைவதே வாழ்க்கை’ என நாமும் நம்பினோம்தானே. ஆகவே சிறு வயது முதலே இரசனையைக் கற்றுக் கொள்ளவோ சொல்லிக் கொடுக்கவோ மறந்த நாமும் இந்த நிலைமைக்கு ஒரு காரணமல்லவா!

Comments are closed.