மனமயக்குப் பாடலென/எம்.டி.முத்துக்குமாரசாமி

புல்லாங்குழலிசையின்
மனமயக்குப் பாடலென
இரவு கனிகிறது
கண்ணே
நானோ உனக்கான நினைவின் தவிப்புடன்
நடு நா வறள யுத்தக் காட்சிகளை
ஓளிப்பந்துகளின் சிதறல்களை திரைகளில்
பார்த்திருக்கிறேன் ஆற்றின் அலையில்
ஆலிலையில் மிதக்கும் சிற்றெறும்பென
என்ன இரவுகள இவை எனச்
சொல்லத் தெரியவில்லை
இருப்பாய் உயிர் மீந்திருக்கிறேன்
அறியப்படாத எண்ணற்ற சுரங்க வழிகளில்
உன்னையடைய நினைக்கிறேன்
வெளிச்சம் போதுமானதாக இல்லையென்றாலும்
காதலுக்கான இங்கே இப்போது டன் கணக்கில்
சொற்களின் யத்தனம்
அங்கே இப்போது பேரழிவு
என்பதன் இக்கண கலவையை என்னவென்பது
கண் மை அழிந்து கன்னத்தில் வழிய
முழங்கால் தேய நீ பிரார்த்தித்து இருக்க
நான் என்ன செய்ய
இந்த அரைகுறைக் கவிதையை
உன் உறக்கம் நீட்டிக்கும்
கனவாய் அனுப்புவதைத் தவிர