மாண்புமிகு மகளிர்/அன்புச்செல்வி சுப்புராஜூ


  • கயிறும், மெட்டியும், முக்காடும், பர்தாவுமாய்
    அடையாளங்களின் முகமூடிக்குள் தன்னை இருத்தி
    மூச்சு முட்டுதலிலும் விசும்பி
    தன் முகம் தேடும் சுயம்புவாய்…

அகமோ, அரசியலோ, சமுதாயமோ, சாக்கடையோ
எங்கெங்கெனினும், எச்சாடலிலும்
பெண்மையை இழுத்திடும் வசவுகளில்
நெளியும் எகத்தாளப் புழுக்களை
சுட்டெரிக்கும் சூரியக் கதிராய்…

கயமைகளின் குதறலில் கடியுண்டு
உதிர்ந்தது பிஞ்செனினும்…
பொத்தி வைக்காததுன் குற்றமெனக்
குதறும் நயவஞ்சகக் கூட்டமதை
எத்தித்தள்ளி நிமிரும் நறுமுகை யாளியாய்…

பெண்மையாய், தாய்மையாய், மனிதியாய், இறைவியாய்
எத்தனை பிறப்புகள் எடுத்தால் என்ன?
உரிக்க, உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயமாய்
தடியேந்திய ‘பெரியார்’கள் சூழ
பீடு நடையிடுகிறது…

மண்ணில் தழைத்து விண்ணையே வளைக்கும்
வல்லமை படைத்த
மாண்புமிகு மகளிர் கூட்டம்!
மாற்றங்களைத் தேடிக்கொண்டே…

One Comment on “மாண்புமிகு மகளிர்/அன்புச்செல்வி சுப்புராஜூ”

Comments are closed.