சகா/ஆர். வத்ஸலா

வீட்டில் எல்லோருக்கும்
தேனீர் போட்டுத் தரலாம்

துணிகளை
துவைக்கும் இயந்திரத்தில்
போட்டு எடுத்து உலர்த்தலாம்
உள்ளாடைகள் உட்பட

இயந்திரமில்லாவிட்டால்
நீங்கள் கூட
தோய்த்துப் போடலாம்

வீட்டுப் பெண் பணியிலிருந்து
திரும்புமுன் நீங்கள் திரும்பி விட்டால்
நீங்கள் சமைத்த அல்லது சுட வைத்த
உணவை குழந்தைகளுக்கு அளித்து
உண்டு
அவளது உணவை கேஸராலில் மூடி வைத்து
பாத்திரங்களை ஒழித்துப் போட்டு
மேஜையை மேடையை துடைத்து‌ வைக்கலாம்
அடுத்த நாளைக்கு தேவையான பாத்திரங்களை
தேய்த்து வைக்கலாம்

உங்கள் பெற்றோருடன் சேர்த்து
மனைவியின் பெற்றோரையும் பேணலாம்

சக பெண் ஊழியர்களை
உங்களைப் போலவே
திறனுடைய மனிதர்களாக பார்க்கலாம்

அப்படியும் தேவையென்று தோன்றினால்
வாழ்த்து சொல்லுங்கள்
மகளிர் தினத்திற்கு

One Comment on “சகா/ஆர். வத்ஸலா”

Comments are closed.