
கால யௌவனம்
தன்
கடைசி
ஆடையைக்
களைந்தெறிந்த
அந்நள்ளிரவில்
கிழவனாகி
இருந்தேன்.
மின்னும்
நாசிகளில்
நாகரீகம்
துலங்க
பவனி வரும்
சின்னஞ்
சிறுசுகளில்
தெரிகிறது
என் பெண்ணின்
சாயல்.
இடுப்புகளில்
அடுக்குகள்
துலங்கும்
அங்காடிப்
பெண்கள்
இனி
அழகாய்த்
தெரிவார்கள்
முன்னெற்றியில்
நழுவி வழிகிற
முடிக் கற்றைகளை
நீவி விடுகிற
காதல் மனைவியின்
விரல்களில்
சுருக்கங்கள்
இல்லாதிருக்கணும்
சன்னல்களில்
முகம் புதைத்து
விரையும்
பெட்ரோல்
வீதிகளில்
எதையோ
தேடுகிற
இவனது
விழிச்சாயல்
புரிபடாது
இனி
இன்னொருமுறை
காலம்
தன் ஆடைகளைக்
களைந்தெறியும்
நாள்
என்னவாக
ஆவேன்
நான்?
