எஸ்.சண்முகம் கவிதை

அந்த மெல்லொலி வந்தடையும் முன்
செவிகள் வேறொரு சப்தத்திற்கு இணங்க
ஆரம்பிப்பதை தடுக்க வேண்டும்

நெருங்கி வந்த ஒலியின் கூர்மை மழுங்கி கரைகையில்
தெருவில் தொங்கும் கம்பியின் மேல்
சிறகடக்கி நிற்கும்
வயலெட் உடலெங்கும் வெண்புள்ளிகள் இரைந்துள்ள
கையளவு பறவையின் அலகில்
கிழக்கு தகதகப்பதைப் பார்ப்பதைவிட
வேறெது முக்கியம்
பற்பசை உலரட்டும்

அடுக்குமாடிகளுக்கு இடையில் மிதக்கும்
கம்பிகளின் கீழ் நேரெதிராகவும் நேராகவும் கொஞ்சமும் மேலே பார்க்காமல் போவோர் போகட்டும்

அலகில் இளம் ஒளியைத் ஏந்திய
வெண்புள்ளி வயலெட் பறவை பறந்தேகும் வரை
இவ்விடம் நீங்கவியலாது.

6 Comments on “எஸ்.சண்முகம் கவிதை”

  1. மிக மென்மையான உள்ளம் கொண்ட , புரிந்துணர்வு கூடிய
    நெஞ்சத்திலிருந்து மட்டுமே இப்படிப்பட்ட பூப்போன்ற கவிதை வெளிப்படும்🌺

  2. வெண்புள்ளி வயலெட்
    பறவை பார்க்கக் கிடைக்கும் பேறு பெற்றவர், அதுவும் காலை இளம்
    வெயிலின் அழகான
    ஒளி யில், அதை அலட்சியம் செய்யவோ, அங்கிருந்து
    நகர்ந்து செல்லவோ
    நினைக்கவும் முடியுமா.
    மரங்களினடர்த்தியில்
    மறைந்து கொண்டு
    இனிமையாக சலம்பிக்
    கொண்டிருக்கும் பறவைகளை எவ்வளவு
    முயன்றும் பார்க்க முடியவில்லையே என்று
    ஏங்குபவர்கள் மட்டுமே
    இதை புரிந்து கொள்ள
    முடியும்.

  3. ரசனை‌ அழகு. அதையும் விட அழகு அதைக் கற்றுத் தராதது போலவே கற்றுத் தருவது. அடுத்த முறை மின் கம்பிகளில் உட்கார்ந்து இருக்கும் நீல நிற பறவையின் சிறகில் ஒளிரும் கதிரவனை தேடுவீர்கள்.

Comments are closed.