
அந்த மரங்களுக்கு வலிக்கிறது
நகக் கண்களைப் பெயர்த்தெடுக்கும் வலி
உதிரும் நகங்களாய்ப் பழுத்த இலைகள்
திடீரென்று மொட்டையாக
குச்சி குச்சியாக நிற்பது
ஆடை இல்லாததுபோல்
அவமானமாக இருக்கிறது
இந்தக் காற்றுக் காலத்தில்
இப்படியொரு கண்றாவி
இங்கும் அங்குமாய்
ஆடிக்கொண்டு வேறு
கூட்டமாய்ச் செல்லும் பறவைகள்
கடந்து செல்கின்றன
கூப்பிட்டால் மட்டும்
வரவா போகின்றன
நெருக்கி அடித்து
இலைகள் இருந்தால்
உள்ளுக்குள் வந்து
உட்கார்ந்து கொள்ளும்
இந்தக் குச்சிகளில் வந்து
மாட்டிக் கொண்டால்
இறகுகளுக்கு வலிக்கும் என்று
தெரியாதா என்ன
சூரியன் கூட முறைத்துப் பார்க்கிறான்
அவனுக்கும்
அந்த பச்சை இலைகளைப் பார்த்து
தனது சூட்டைத் தணிக்கும் சந்தோஷம்
பறிபோன கோபம்
இந்த நிலவும் இரவில்
இலையுதிர்ந்த மரத்தை
ஏனோதானோ என்றுதான்
பார்த்துப் போகிறது
ஒரு மழை வரட்டும்
கம்புகளின் காம்புகள்
விரிந்து இலைகள் வரும்
விரைந்து இலைகள் மூடி
கனத்த பச்சையாகி
காட்டும் அழகை
அப்போது
காய் வரும் , பழம் வரும்
காணாமல் போன
பறவைகளும் வரும்

சிறப்பான கவிதை! இப்படித்தான் திடீர் திடீரென நல்ல கவி முத்துக்களை இறைத்துவிட்டு நகர்ந்து கொண்டே இருக்கிறார் நாகேந்திரர்!
அருமையாக வந்திருக்கிறது.