
தினம் காணும் அந்த மரத்தின்கீழ் நிற்கும்
அதே இருசக்கர வாகனங்கள்
பின்னாலொரு கோயில் கொடிக்கம்பத்திற்குமுன்
ஒரு குட்டை மரம்
நாய்கள் எதையோ நோக்கி நகர்கின்றன
வாகன சக்கரங்களின் தடங்கள்
மண்சாலையில் தார்ச்சாலையில்
அருகிலும் அப்பாலும் காணக் கிடைக்கவில்லை
மரம் எந்நேரமும் நகர்ந்து அசைந்தாடுவதைப் பார்க்கையில்
அதன் கிளைகளின் நடுவில் அந்திச் சுழியம்
ஆடாமல் நிலைத்திருக்க
எனக்கும் மரத்திற்கும் ஆரஞ்சு சுழியத்திற்கும்
இடையில்
நேர்க்கோட்டிலும் குத்துக்கோட்டிலும்
கிடைக்கோட்டிலும்
குறுக்கீடுகள் நடந்திருப்பினும்
நிலைப்புள்ளி மாறாமல் இருப்பதை உணர்ந்து நீங்கியது
சக்கரங்களின் மண்பதிவில்
மரம் உயர்ந்தும்
அந்திச் சுழியம் தாழ்ந்தும் தோன்ற
நானின்றியே மீண்டேன்.
