
உடல் இயந்திரம்
அதன் சேருமிடம்
நோக்கி
தடதடவென ஓடுகிறது.
ஓட்டத்தில்
எழும் சத்தங்கள் உள்ளுக்குள் ஒருவித நடுக்கத்தை தோற்றுவிக்கின்றன.
இரயில் பாதையென உடலில் ஓடும்
நரம்புகளின் குருதியை ஊடறுக்கும் வலி
எங்கும் வியாபிக்கிறது.
அணையப் போகும் விளக்கின்
கடைசியில் ஒளி மிகுந்து அவிவது போல்
ஒரு கால ஓட்டம் ஓடிக்கொண்டிருக்கிறது உடல்.
ஓடு ஓடு
ஓட்டம் தான்
வாழ்க்கை.
ஓட்டம் நிற்கும்வரை ஓடு. காலச் சித்தன்
சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறான்.
உடலின் ஓசையை
கேட்க சகிக்கவில்லை காதுகள் மூடி
கண்கள் மூடி
அமரும் தருணம்
உடலின் தடதட ஓசைகள் மனசுக்குள் கேட்க நடுங்குகின்றன
நம் கனவுகள்.
