இனிக்கும் தமிழ்/டி வி ராதா கிருஷ்ணன்

திருமந்திரம் – இடிகரை நிற்குமோ

ஆற்றின் கரைக்கு இடி கரை என்று பெயர். இடிந்து கொண்டே இருக்கும் கரை.
வினையெச்சம். இடிந்த கரை, இடிந்து கொண்டே இருக்கும் கரை, இனியும் இடியும்
கரை.e

அது போல, நம் வாழ்வும்.

ஒரு நாள் சந்தோஷம், ஒரு நாள் உற்றார் உறவினர் கூட கொண்டாட்டாம், ஒரு நாள்
பிரிவு, புது உறவுகள் வரவு,  பழைய உறவுகள் விட்டுப் போதல், ஆரோக்கியம் பல
நாள், அங்கொன்றும், இங்கொன்றுமாக நோய் சில நாள் என்று ஓடிக்
கொண்டிருக்கும் வாழ்க்கையில், அதன் மொத்த நாளையும் இந்த கால வெள்ளம்
அரித்துக் கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு நாளும் கொஞ்சம் அரித்து எடுக்கும்.

இளமை போகும். ஞாபகம் போகும்.  அழகு போகும். கொஞ்சம் கொஞ்சமாக.

நமக்கு முன் வந்தவர்கள் எத்தனையோ பேர். எல்லோரும் முடிந்து போய்
விட்டார்கள். இன்று இருப்பவர்களுக்கும், இனி வரப் போகிறவர்களும்
நிரந்தரமாய் இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஒன்றும் இல்லை.
எத்தனை மாத்திரை, மருந்து, சிகிச்சை, சோதனை செய்தாலும் என்ன? இடிகரை
நிற்காதது போல, நம் வாழ்வும் நிலைக்காது என்கிறார் திருமூலர்.

பாடல்

முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்

பின்னை வந்தவர்கென்ன பிரமாணம்

முந்நூறு கோடி உறுகதி பேசிடில்

என்ன மாயம் இடிகரை நிற்குமோ

பொருள்

முன்னம் வந்தனர் = நமக்கு முன்னால் வந்தவர்கள்

எல்லாம் முடிந்தனர்  = எல்லோரும் இறந்து போய் விட்டார்கள்

பின்னை வந்தவர்கென்ன பிரமாணம் = பின்னால் வரப் போகிறவர்கள் நிரந்தரமாக
இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் ?

முந்நூறு கோடி  =  முந்நூறு கோடி

உறுகதி பேசிடில்  = பிழைக்கின்ற வழி பற்றி சிந்தித்தாலும்

என்ன மாயம் = என்ன மாயம்

இடிகரை நிற்குமோ  = இடி கரை நிற்குமோ? (நிற்காது என்பது பொருள்)

(நம் வாழ்வு இருக்கின்ற வரை, நல்ல வழியில் பயன்படுத்துவோமாக).