
தொலைக்காட்சித் தொடரில் எல்லோரும் அழுது கொண்டிருந்தார்கள். முக்கிய கதாபாத்திரம் இறந்து போய்விட்டது .பார்த்துக்கொண்டிருக்கும் சுந்தரி, அவள் கணவன் சேகர், அவன் அம்மா ஆகிய மூவரும் சோகமாக .சேகர் கையில் இருந்த பேப்பர் மடியில் சாய்ந்தது. சுந்தரி மடியில் மகளுக்குப் புட்டிப்பாலை கொடுத்துக்கொண்டு. மாமியார் காய்கறி நறுக்கிக் கொண்டு.
இடையில் வந்த விளம்பர இடைவேளையில் ‘அந்த அய்யாவை அநியாயமாக் கொன்றிருக்க வேண்டாம்’ என்றாள் சுந்தரி .
‘அந்த நடிகர் சினிமாவில் நடிக்கப் போய்விட்டார். அதுதான் கொன்னுட்டாங்க. ‘
‘அதுக்காக இப்படியா, வேறு யாரையாவது மாத்தி போட்டு இருக்கலாம். சில ஹிந்தி தொடரில் எல்லாம் அப்படித்தான் பண்றாங்க. அந்தக் குடும்பத்துக்கு ஆணிவேராக இருந்தவர் . இனிமே அந்தக் குடும்பம் என்ன ஆகப்போகிறதோ ‘ என்று கண் கலங்கினாள் சுந்தரி.
தொடர் மறுபடி ஆரம்பமாகி விட வீட்டில் நிசப்தம் ..மறுபடி குழந்தையை தட்டிக் கொடுத்த படி , கண்களைத் துடைத்தபடி சுந்தரியின் கண்கள் டிவி பெட்டியை விட்டு அகலவில்லை.
சாவு வீட்டைப் பற்றிய சகல விஷயங்களும் அந்த தொடரில் விலாவாரியாகக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள் . இவர்களுக்கும் அழுகை தாங்க முடியவில்லை .கண்களை துடைத்துக் கொண்ட சேகரின் அம்மாவுக்கு அவள் கணவர் இறந்து போனது ஞாபகத்திற்கு வந்தது . சேகருக்கும் அதேதான். ‘அப்பாவுக்கும் இதே மாதிரி தானே எல்லா சடங்குகளும் நடந்தன’ என்று வருத்தத்துடன் சொன்னான்.
அடுத்த இடைவேளையில் வந்த விளம்பரம் சாக்லேட் சாப்பிடச் சொன்னது. குளிர்பானம் குடிக்கச் சொன்னது. பட்டுப்புடவையைக் குறிப்பிட்ட கடையில் வாங்கச் சொன்னது. ‘நேரங்கெட்ட நேரத்தில் என்ன மாதிரி விளம்பரம் போடுறாங்க’. அலுத்துக் கொண்டாள் சுந்தரி. கடைசிப் பகுதி . பிணம் எரிகிறது.சுடுகாட்டுச் சாம்பல் .இங்கே வீடே சுடுகாடு ஆனது போல் ஒரு நிசப்தம். அனைவரின் கண்களும் கலங்கியிருந்தன.
எரியும் நெருப்போடு ‘தொடரும்’ போட்டதும் டிவியை ஆஃப் செய்ய எழ முயன்ற சுந்தரியின் மடியில் புட்டிப்பாலை தள்ளி விட முயன்று முயன்று தோற்றுப் போய் மூச்சுத்திணறி விறைத்திருந்தாள் அவள் குழந்தை.
