எம்.டி.முத்துக்குமாரசாமி கவிதை

மணலில்
கைவிரலால் கிறுக்கிக்கொண்டிருக்கிறாய்
பதநீரும் நுங்கும் விற்கும் பெண்
வெள்ளை ரிப்பன் கட்டிய
இரட்டைச் சடையை மடித்துக்கட்டியிருக்கிறாள்
வண்ணப்பொடிகளிருந்தால்
இப்போது வெள்ளை நிறத்தைக சேர்த்திருக்கலாம்
அவள் பனையோலைத் தொன்னைகளுக்குக் கீழே
பள்ளி பாடப்புத்தகங்களை வைத்திருக்கிறாள்
மணல் சித்திரத்தில் மேடு பள்ளங்கள்
இருக்கின்றன அவற்றின் சரிவுகளிலும்
ஏற்றங்களிலும் காற்றும் கடலலைகளும்
கட்டியதும் அழித்ததும் போக
உன் கைவிரல்கள் பதிப்பதென்ன
அவள் தொன்னையை உயர்த்தி
பதநீர் வேண்டுமா எனக் கேட்கிறாள்
இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு மணல் துகள்
கூட கூடுவதோ குறைவதோ இல்லை
நீ பதநீர் அருந்துகையில்
நீ விட்டு வந்த மணல் சித்திரம்
உருமாறி வேறொன்றாய்
வேறொரு சமநிலையில்