
வீட்டு வாசல் முன் அவர்கள் நின்றார்கள். ஒருவர் தலையைப் பார்க்க சடைமுடியாக இருந்தது. பழங்கால மனிதராக வினோதமாகக் காட்சி அளித்தார்.கூட வந்தவர் போன நூற்றாண்டு மனிதர். அவர் பெயர் கேள்விப்பட்ட பெயராக இருந்தது. இந்த நூற்றாண்டிலும் அவரைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அவருடைய ஒரு கதை ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’.அதை எழுதிய புதுமைப்பித்தன்தான் வந்திருந்தார். அப்போது அவர் பக்கத்தில் நின்றிருப்பது கடவுளா என்று தோன்றியது.ஆமாம் என்று அதை உறுதிப் படுத்தினார் பு.பி. இருவரையும் உள்ளே அழைத்தேன். புத்தகம் இருக்கும் அறையில் நான் அழைத்துக்கொண்டு
போனேன். திகைத்துப் போய்விட்டார் புதுமைப்பித்தன்.
‘நான் ஒரு பத்திரிகை நடத்துகிறேன்,’ என்று நவீன விருட்சம் பத்திரிகையைக் கொடுத்தேன். வாங்கிக்கொண்டு இப்படியும் அப்படியும் பார்த்தார். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை.
அவர் கண்ணில்
தொ.மு. சி ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தன் வரலாறு தென்பட்டது. புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தபடி, ‘நான் இந்தப் புத்தகத்தை எடுத்துக் கொள்ளலாமா? ‘ என்று கேட்டார் என்னைப் பார்த்து.
உடனே கடவுள் என் சார்பாக,
‘அவர் யாருக்கும் புத்தகம் தர மாட்டார்,’ என்று கூறினார்.
நானும் ஆமோதித்தேன். பு.பி அந்தப் புத்தகத்தை புத்தகக் குவியலில் தூக்கிப் போட்டார் கோபமாக.
யாருக்காவது வரம் கொடுக்காமல் கடவுளால் இருக்க முடியாது. ‘என்ன வரம் வேண்டும் கேள்..’ என்றார் என்னைப் பார்த்து.
உடனே யோசிக்காமல், ‘ஆயிரம் பிரதி விருட்சம் வாங்க இப்பவே யாராவது வரவேண்டும்,’ என்றேன்.
உடனே சிரித்தார் கடவுள். “ஏன் ,” என்றேன்.
“கடவுளால் முடியாதா?” என்று கிண்டலடித்தேன்.
ஒரு நிமிடம் கண்ணை மூடினார் கடவுள்.
“இன்னும் அரை மணி நேரத்தில் ஒருவர் வருவார்.” உண்மையில்
அரை மணி நேரத்தில் ஒருவர் வந்து வாசல் கதவைத் தட்டினார்.
வந்தவர் எடுத்தவுடன், “விருட்சம் சந்தா ஆயிரம் பெற்றுக் கொள்ளுங்கள்… இந்தாருங்கள் அதற்கான தொகை” என்று தொகையைக் கொடுத்தார்.
என்னால் நம்ப முடியவில்லை.
நான் ஆச்சரியத்துடன் கடவுளைப் பார்த்தேன். நான் பார்த்த இடத்தில் கடவுள் இல்லை. புதுமைப்பித்தனைப் பார்த்தேன். அவருமில்லை.
அவர்கள் வந்துபோன சுவடையே காணவில்லை.
ஆனால் புதுமைப் பித்தனைப் பற்றி எழுதிய தொ.மு.
சி ரகுநாதன் புத்தகம் மட்டும் காணவில்லை.

இதைத்தான் பின் நவீனத்துவக் கட்டுரை என்பார்களோ?
நல்லது, நூலகத் துறையில் இருந்தாவது பணம் வந்ததா? சந்தா ஆர்டர் திட்டியதாக முன்பொரு தரம் எழுதினீர்களே!
*கிட்டியதாக