கால சுப்ரமணிய ம் கட்டுரை

புத்தகம் என்றால் படிக்கப்படவேண்டும், திரைப்படம் என்பது பார்க்கப்படுவதற்கே. இவற்றைப் படிக்கவும் பார்க்கவும் நிறைய நேரம் ஆகும். நிறைவு கிடைக்கும். ஆனால் இவற்றைப் பற்றி எழுதமுன்வந்தால் இன்னும் அதிக நேரமும் அலைச்சலும் ஏற்படும். எனவே மிகத் தேவையானால் தவிர இவை பற்றி எழுத மனம் வருவதில்லை. தானாகத் தேடிப் படிக்கவும் பார்க்கவும் செய்யவேண்டுமே தவிர இவற்றை அறிமுகப் படுத்துவதிலோ விளக்கவுரை செய்வதிலோ ஈடுபாடு வருவதில்லை. ஆனால் எழுதுவன்தான் எழுத்தாளன் என்பதிலும் சந்தேகமில்லை.

நல்ல வாசகன் என்பவன் தனக்கு பரிந்துரைக்கப் பட்டவற்றை, தேர்ந்தெடுத்து அளிக்கப்படுபவைகளை, மோஸ்தர்களைப் பின்தொடர்பவன் அல்லன். தானாகத் தட்டுத்தடுமாறித்தேடி, யதேச்சையாக வந்தடைந்தவற்றை ஆராய்ந்து தனக்கானவற்றைக் கண்டடைந்து அவற்றில் ஆனந்தம் பரவசம் பெறுபவன்தான்.

புதுமைப்பித்தன், கவியோகி சுத்தானந்த பாரதியைப் பற்றி (எழுத்தில் அல்ல நேர்கூற்றில்) ‘அவர் ஒரு நிரந்தர வாந்திபேதி’ என்று சொன்னதாக வதந்தி உண்டு
(ஜெயமோகன் தவறாக ஒரு இடத்தில் – சித்தர் பாடல்களைப் பற்றிச் சொல்லும்போது – இவரை சதுசுயோகி என்று ஞாபகப்பிசகாகச் சொன்னது ஞாபகம் வருகிறது) நூற்றுக்கணக்கில் சுத்தானந்தர் படித்ததையெல்லாம் எழுதித்தள்ளியிருக்கிறார். (இருபது முப்பதாவது படித்திருக்கலாம். உருப்படியானவை, ஏழைபடும் பாடு, இளிச்சவாயன் என்ற இரண்டு விக்டர் ஹியூகோ நாவல்கள்தான். அவரது சுயசரிதை நூலொன்றும் (யோகசித்தி) நன்றாக இருக்கும்) சதுசு யோகியின் தமிழ்க்குமரி கவிதைத் தொகுதியில் கண்மணிராஜம் போன்ற சில கவிதைகள் நன்று.

நான் பணி ஓய்வுபெற்று 3 ஆண்டுகளாகியும் – ஆய்வுநெறியாளராக இருந்தவற்றில் கடைசி டாக்டர் பட்ட ஆய்வாளருக்கு – எதிர்வரும் 23ல்தான் வைவா (பொது வாய்மொழித் தேர்வு) நடைபெறவுள்ளது. அதன் தலைப்பு ‘சித்தர் மரபும் கரைச்சித்தரின் கனகவைப்பும்’. கனகவைப்பை கவிதையாக்கியவர் சதுசுயோகி என்ற வதந்தியும் உண்டு. கரைச்சித்தர் என்ற ஒருவர் இருந்ததில்லை என்று வீ,அரசு போன்ற நல்ல ஆய்வாளர்கள் ஆராயாமல் எழுதியிருக்கிறார்கள். கோமல்சுவாமிநாதன் சதுசுவையும் கரைச்சித்தரையும் கிண்டல்செய்து எழுதியிருக்கிறார், அதைத்தான் மேலே கூறிய கட்டுரையில் ஜெ வழிமொழிந்திருக்கிறார். அவர் போற்றுகின்ற அசோகமித்திரன் எழுதிய மானசரோவர் நாவலில் வரும் சித்தர், கரைச்சித்தர்தான் என்பது பெரும்பாலோருக்குத் தெரியாதது. ரஸவாதம் முதலிய வழக்கமான சித்தர் மரபைப்பேசுவது கனகவைப்பு. அதில் ஏதும் உன்னதங்கள் இருக்கின்றனவா பிதற்றல்களா என்பது வேறுவிஷயம்.

எங்கோ ஆரம்ப்பிது எங்கோ (?) போயாயிற்று. மன்னிக்கவும்.