உட்செவிகளில் ரீங்காரமிடும் கவிதைகள்/அதங்கோடு அனிஷ்குமார்

நகுலனின் சுருதி கவிதைகள் – ஒரு பார்வை

    தமிழ் இலக்கியத்தின் தனித்த அடையாளங்களில் ஒருவராக அறியப்படும் நகுலனின் எழுத்துக்கள் பிரச்சார நெடியற்றவை. கவிஞர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர் என பன்முகம் கொண்ட நகுலன் ஆங்கிலத்திலும் எழுதியவர்.  அவரது  Non-Being புகழ்பெற்ற தொகுப்பு. தனிமனித உறவுகளை, உறவுப் பிறழ்வுகளை, அனுபவக் குறிப்புகளாக முன்வைக்கும் அவரது கவிதைகள் ஆழ்ந்த வாசிப்பிற்குரியவை.  படைப்புப் பணியில் வாசகர்கள் பங்கேற்பாளர்கள் எனும் கருத்தியலோடு பொருந்தி வரும் நகுலன் கவிதைகள் சிந்திக்கத் தெரிந்த வாசகனை நோக்கி எழுதப்பட்டது போன்று தோன்றுவது இயல்பாகும்.  அப்படிப்பட்ட வாசகர்களுக்கு விதவிதமான அனுபவங்களை வழங்குவதோடு புதிய புதிய தரிசனங்களுக்கான வாசல்களையும் திறந்து வைப்பவை அவரது கவிதைகள்.  சின்னஞ்சிறு கவிதைகளையும் நீள்கவிதைகளையும் எழுதியிருக்கும் நகுலனின் சுருதி கவிதைகள் ஒரு குறிப்பிடத்தக்க சிறு தொகுப்பு.  1987-ல்  வெளிவந்த சுருதி கவிதைகள் விருட்சம் வெளியீடாக மீள்பிரசுரம் கண்டிருக்கிறது.  இத்தொகுப்பைப் பதிப்பித்திருக்கும் எழுத்தாளர் அழகியசிங்கர் ‘கவிதையும் ரசனையும்’ எனும் தனது முன்னுரையை ‘மிகச்சிறிய வரிகள் கொண்ட கவிதைகளை எழுதியிருக்கும் நகுலன் ஒவ்வொரு கவிதையையும் படித்தபின் நம்மை யோசிக்க வைக்கிறார்.  நம்மையே நம்மை உற்றுப் பார்க்க வைக்கிறார்.  வாசகர்களையே அவர்களை உற்றுப் பார்க்க வைக்கிறார்’ என மிகப் பொருத்தமான ஒரு மதிப்பீட்டுக் குறிப்புடன் முடித்திருக்கிறார்.  

    சுருதி கவிதைகள் தொகுப்பு தலைப்பிடப்படாத நான்குவரி கவிதையிலிருந்து தொடங்குகிறது. 

    உன் உலகத்தில் இருப்பது

    தான் குதூகலமாக இருக்கிறது 

    சுசீலாவின் 

    கடிதத்திலிருந்து 

மிகவும் அந்தரங்கமாக எழுதப்பட்ட ஒரு காதல் கடிதத்திலிருந்து எடுக்கப்பட்ட இரண்டு வரிகள் முதலிரண்டும் என்பதை அடுத்த இரண்டு வரிகள் சொல்வது போல் தோன்றுகிறது.  நகுலனின் Icon-ஆன சுசீலாவிற்கு சக மனிதர்களுடனான வாழ்க்கை சலிப்பூட்டுகிறது எனும் குறிப்பும் மறைந்து நிற்கிறது. ‘குதூகலமாக இருப்பது’ வாழ்வில் எப்போதேனும் நிகழும் நிகழ்வு.  அதுவும் ‘உன்னோடிருக்கும் போது’ மட்டும் நிகழும் அபூர்வ நிகழ்வாகச் சுட்டப்படுகிறது.  

    ‘தன்னோடிருத்தல்’ என்பதை நகுலன் கவிதைகளில் காணப்படும் பொது இயல்புகளில் ஒன்றாக கருத அவரது கவிதைகள் இடமளிக்கின்றன.  தன்னோடு தனிமையில் இருத்தல் படைப்பாக்க கணமாக இருப்பதாக அவர் ஒரு கவிதையில் குறிப்பிட்டது நினைவிற்கு வருகிறது.  அவரது ‘நான்’ கவிதை இந்த தனிமை வழமையானது தான் எனும் குறிப்புடன் தொடங்குகிறது.  

    வழக்கம் போல் 

    என் அறையில் 

    நான் என்னுடன்

    இருந்தேன் 

தன்னோடு இருக்கும் இந்த தனிமை கணம் கதவு தட்டும் சத்தத்தில் முடிவுக்கு வருகிறது.  சுசீலாவின் வருகையை சற்றும் எதிர்பாரத அவரது மனது இப்படி எழுதிப் போகிறது.  

    எந்த சமயத்தில்

    எந்த கதவு 

    திறக்கும் என்று

யார் தான் 

சொல்ல முடியும்?  

சுசீலாவின் வருகை ஒரு வகையில் ஒரு குதூகல உணர்வைக் கூட்டும், இருப்பிற்கு அர்த்தம் கூட்டும் வருகையாகத் தெரிகிறது. இந்த மனநிலையை கடந்தும் தனிமையின் இருப்பை அழுததமாக உணர்த்தும் கவிதை ‘பிராந்தி’

    யாருமில்லா பிரதேசத்தில்

    நான் ஒரு நிழலாகத் திரிகிறேன் 

    இதிலிருந்து வெளிவராதிருக்க

    இன்னும் ஆழ வேண்டும்

பிராந்தியுடனான இந்தத் தனிமை ஒருவித Highest Happiness என எழுதும் நகுலன் மிதத்தலை அல்ல அடிமட்டத்தில் ஆழ்ந்து கிடக்கும் அனுபவத்தையே விரும்புவதாகக் கூறுகிறார்.  இருப்பிற்கு எதிரான இயக்கமாக இந்த ‘ஆழ்ந்து கிடக்கும் அனுபவத்தைக்’ குறிப்பிடலாம்.  இப்படியாகத் தனிமையின் கதவுகள் நகுலனின் சுருதி கவிதைகளில் திறந்து கொண்டே போகின்றன.  இந்தத் தனிமை உருவாக்கும் ‘உள்போதம்’, ‘தனிமை’ எனும் கவிதையில் தீர்க்கமாக வெளிப்படுகிறது.  நண்பர்கள் வந்துவிட்டு சென்றபின் உருவாகும் தனிமை ஒரு உள்நோக்கிய யாத்திரையாக மாறுகிறது. 

    என்னிடமிருந்தே

    நான் 

    வந்து கொண்டும்

    போய் கொண்டுமிருக்கிறேன் 

என அவர் எழுதும்போது வந்து போனவர்கள் அவரது தனிமை மீது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் வந்து போயிருப்பதாகவே தோன்றுகிறது.  ‘சிலர்’ எனும் கவிதையில் , 

    சிலர் 

    வந்ததும்

    வந்து 

    சென்ற

    பிறகும்

    சூன்யமாகவே

    மிஞ்சுகிறார்கள் 

என வரும் வரிகள் இந்த காரணத்தை உறுதிப்படுத்துகின்றன.  அவர்கள் இருத்தலால் இடத்தை அடைப்பவர்களாகத் தெரிகிறார்கள்.  ‘கேட்டது’ கவிதையில் அப்படிப்பட்டவர்கள் ‘ஜடம்’ என தன் அம்மா குறிப்பிடுவதாக நகுலன் எழுதுகிறார்.  

    தனிமையைக் கொண்டாடும் மனநிலையை இருத்தலின் வாதைகள் தோற்றுவிப்பதாகக் கொள்ளலாம்  அல்லது இருத்தலின் அவஸ்தைகளிலிருந்து தப்பிப்பதற்கான எத்தனிப்பாகவும் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது.  அப்படிப்பட்ட அவஸ்தை ‘இடையில்’ எனும் கவிதையில் பதிவாகியிருக்கிறது. 

    ‘ஏன்

    இப்படி குடிக்கிறீர்கள்?’

    என்று கேட்டான் 

    ஏன் 

    இப்படி வாழ்கிறீர்கள்?’

    என்று நான் கேட்கவில்லை

    உங்கள் வாழ்வுக்கும்

    என் சாவுக்கும் இடையில்

    வேறொன்று

    நிகழ்ந்து  

    கொண்டிருக்கிறது 

எனும் நகுலன் வாசகனைச் சிந்திக்க வைக்கிறார் அல்லது சிந்திக்கும் வாசகனை நோக்கி எழுதுகிறார். 

    இவ்வுலகம் வன்மங்களால் நிறைந்திருக்கிறது.  அதன் வன்மம் எப்போது வேண்டுமானாலும் வெளிப்படலாம் என்பதைச் சுட்டும் ‘இவைகள்’ கவிதையும், இருப்பின் வலியை சலிப்புடன் சுட்டும் ‘வன்முறை’ கவிதையும் மீண்டும் மீண்டும் மன அவஸ்தைகளையே கொண்டு வந்து சேர்க்கும் நம் உலகைக் காட்சிப்படுத்துகின்றன.  இன்னும் துல்லியமாக நகுலன் வரிகளால்  சொல்வதானால் 

    உலகச் சந்தையில்

    ஒரு மனிதன் போனால் 

    இன்னொருவன்  

அவ்வளவுதான்.  அதனால் தான் அவர் மனம் தனிமையை நாடுகிறது போலும்.  தனிமையை நாட நிர்பந்திக்கும் இந்த உலகச் சந்தையில் நகுலனின் ஒரே ஆறுதல் சுசீலா தான்.  நான் (2) கவிதையில் ‘விந்தைப் புன்முறுவலுடன் வரும் சுசீலா உன் கண் காண வந்திருக்கிறேன்’ எனச் சொல்விட்டு ‘போதுமா’ என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்’ ‘போதுமா’ எனும் வார்த்தை ‘இப்போது திருப்தி தானே’ என கேட்பது போல் தொனிக்கிறது.  சுசீலா வந்து போனதும் ‘என் கண்முன் நீல வெள்ளை வளையங்கள் மிதந்தன’ என எழுதும் நகுலனின் மனது குதூகலிப்பது தெரிகிறது.  நகுலன் ‘நானும் என் எழுத்தும்’ எனும் கட்டுரையில் ‘நான் கவிதை உட்செவியில் எப்பொழுதும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொள்கைச் சார்ந்தவன்’ என்கிறார்.  சுருதி கவிதைகள் இந்த கொள்கைக்கு அப்பாற்பட்டதல்ல எனச் சொல்வதில் தவறில்லை.  

சுருதி கவிதைகள் 

விருட்சம் வெளியீடு

சீத்தாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ்

புதிய எண் 16, பழைய எண் 7

ராகவன் காலனி, 

மேற்குமாம்பலம்

சென்னை – 600 033

தொடர்பு எண் 9444113205 / 9176613205

விலை ரூ.50