சிட்டுக்குருவிகள்/சௌவி

வைக்கோல் போரொன்று உண்டுr
என் வீட்டில்.
தேவைப்படும்போதெல்லாம்
வைக்கோலைத் திருடிக்கொள்ள
சிட்டுக்குருவிகளுக்கு அனுமதியுண்டு

சிட்டுக்குருவிகள் பறந்துகொண்டிருக்கின்றன என் வானத்தில்

வைக்கோல் போரொன்று உண்டு
என் வீட்டில்.
தேவைப்படும்போதெல்லாம்
வைக்கோலைத் திருடிக்கொள்ள
சிட்டுக்குருவிகளுக்கு அனுமதியுண்டு

எப்போதும் தண்ணீர் நிறைந்து நிற்கும்
தொட்டியொன்று உண்டு.
அதில் எப்போது வேண்டுமானாலும்
சிட்டுக்குருவிகள் குளித்துக்கொள்ளலாம்

என் வீட்டில்
எந்த இடத்திலும்
சிட்டுக்குருவிகள் கூடுகட்டிக்கொள்ள
அனுமதியுண்டு

வேப்பமரத்துக் காற்றோடு
சிட்டுக்குருவிகளின் குரலும் சேர்ந்தால்
அதுவே சொர்க்கம்
அச்சொர்க்கத்தைத் தர
சிட்டுக்குருவிகள் மறுப்பதேயில்லை

துணிகளுலர்த்தும்
நீள்கம்பியின் மேலமர்ந்து
ஒவ்வொரு சாயங்காலமும்
அந்த நாளைப்பற்றிப் பகிர்ந்துகொள்ளாமல்
கூடேறுவதில்லை சிட்டுக்குருவிகள்

சிட்டுக்குருவிகளாலான வீடு
சிட்டுக்குருவிகளின் குரலைப்போலவே
பேரழகானது

என் வீட்டின் பேரழகில்
சிட்டுக்குருவிகள் சிறகடித்துக்கொண்டேயிருக்கின்றன
கூட்டிலிருந்து தொட்டிக்கு..
தொட்டியிலிருந்து வைக்கோல் போருக்கு..
வைக்கோல் போரிலிருந்து வானத்திற்கு..
வானத்திலிருந்து
துணிகளுலர்த்தும் கம்பிக்கு..
கம்பியிலிருந்து கூட்டிற்கு.. என
என் வீட்டின் பேரழகில்
சிட்டுக்குருவிகள்
சிறகடித்துக்கொண்டேயிருக்கின்றன

இப்போது சிட்டுக்குருவிகள்
என் வானத்தில் பறந்துகொண்டிருக்கின்றன

2 Comments on “சிட்டுக்குருவிகள்/சௌவி”

Comments are closed.