நினைவுச் சாலை /இயக்குனர் வெங்கட்

எழுபதுகளில் தமிழ் நாடக மேடை கொடி கட்டிக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் மௌலி Flight 172 பிடிக்க ரன்வேயில் ஓடிக் கொண்டிருந்தார்…இன்னொரு பக்கம் விசு , “உறவுக்கு கை கொடு”த்துக் கொண்டிருந்தார். சேஷாத்ரி மரபு மீறாமல் , இலக்கணத்தோடு ஆர்த்தடாக்ஸ் நாடகங்களை போட்டுக் கொண்டிருந்தார். மனோகர் ராவணன் ராமனை விட பரம யோக்கியன் என்றார்.கோமல் ஸ்வாமிநாதன் இன்னும் ‘தண்ணீர்’
பிடிக்க வரவில்லை. நகைச்சுவை நாடகங்களின் முடிசூடா மன்னன்
கே.கே ராமன் தமிழ் மக்களுக்கு P.G Wodehouse -ஐ அறிமுகப் படுத்திக் கொண்டிருந்தார். சோ ராமசாமி , முதல்வர் திரு அண்ணாதுரை முதல் வரிசையில் அமர்ந்து எம்பிக் குதித்து ரசிக்கும் அளவிற்கு முகமது பின் துக்ளக் என்னும் நையாண்டி நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார். மெய்யாகவே நாடகம் மறுமலர்ச்சி கண்டிருந்த நேரம்.
நாடகாசிரியர் ஜிகே பழக்கமானார். எங்கே தனக்குப்பின் எழுத்து வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில்( joke !) மகா சிரத்தையாக என் நாடகத்தை எப்படியாவது அரங்கேற்றம் செய்து விட வேண்டும் என்ற சங்கற்பத்தோடு ஏவிஎம் ராஜனிடம் அழைத்துச் சென்றார். அவர் என் கிரகணம் என்கிற கதையைப் படித்துவிட்டு நெற்றியில் குங்குமத்தை குறுக்காக இட்டுக்கொண்டு கை குவித்து “மகமாயி “ என்றார். அதற்கு என்ன அர்த்தமோ தெரியவில்லை ! பிற்காலத்தில் அக்குளில் பைபிளை இடுக்கிக் கொண்டு எங்கோ
போய்விட்டார். ஜிகே சளைப்பாரா ? நடிகர் கோபாலகிருஷ்ணனிடம் அழைத்துச் சென்றார். அவர் நான் சொன்ன “ரகசியம் பரம ரகசியம்” கதையை சர்வ அலட்சியமாய் நிராகரித்தார். மேஜர் சுந்தரராஜன் அப்போது தான் ஜனங்களுக்கு “ஞான ஒளி” காட்டி கொண்டிருந்தார். நானும் ஒளி தேடி
மேஜர் வீட்டிற்கு சென்றேன். மனிதர் பனியன் துண்டுடன் சமைத்துக் கொண்டிருந்தார் மேஜர் சந்திரகாந்த்தை சமையல் சந்திரகாந்தாய் பார்த்தேன். அவரிடம் கிரகணம் என்கிற ஸ்கிரிப்டை கொடுத்தேன்.ஒரு வாரம் கழித்து வாருங்கள் ரிசல்ட் சொல்கிறேன் என்று ஆங்கிலத்தில் ஒரு தரம் , தமிழில் ஒரு தரம் என்று இரண்டு முறை கூறினார். ஒரு வாரம் கழித்து போனேன். மறுபடியும் சமைத்துக் கொண்டிருந்தார். அவருடைய மார்க்கெட்டை பற்றிய சந்தேகம் எழுந்தது. ஸ்கிரிப்டை திருப்பிக் கொடுத்து “அரைவேக்காடு” என்றார். தன் சமையலை பற்றி தான் கூறுகிறாரோ என்று நினைத்தேன். ஆனால் அவர் என் ஸ்கிரிப்ட்டை பற்றி கூறியிருக்கிறார்! கிரகணத்திற்கு கிரகணம் பிடித்திருந்தது!
தயிர் வடை தேசிகன் என்னை எஸ்வி சுப்பையா விடம் கூட்டி சென்றார்.
அவர் அப்போதுதான் தசரதன் என்கிற சரித்திர நாடகம் போட்டு சிம்மாசனத்தில் இருந்து தடுக்கி விழுந்து காலை ஒடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரைப் பார்க்க கௌசல்யை கைகேயி சுமத்திரை மூவரும் மேக்கப் இல்லாமல் வந்து இருந்தார்கள் . ராமன் தசரதரை கைத்தாங்கலாக அழைத்து காட்டுக்கு ( COT ) கூட்டிக்கொண்டு போனார். கட்டிலில் படுத்தபடியே கதை கேட்டார் .நான் சொன்ன கதை அவர் வேதனையை மேலும் அதிகரித்தது அவர் முகத்திலேயே தெரிந்தது! ஜீவகாருண்யம் கருதி அவரை
மேற்கொண்டும் இம்சைபடுத்தாமல் திரும்பிவிட்டேன்.
என் நண்பன் ராம்கி என்னை மல்லிகை பதிப்பகம் உரிமையாளரிடம் அழைத்துச் சென்றார். அவர் என் ஸ்கிரிப்டை லேசாக திருப்பிப் பார்த்துவிட்டு பொத்தென தரையில் போட்டார்.என் ஸ்கிரிப்டை எடுத்து என் கையில் கொடுங்கள் என்று தீவாரில் வந்த அமிதாப்பச்சன் போல அவரிடம் கேட்டேன். என் உறுதியைப் பார்த்து நிலைகுலைந்து போன அவர் மெல்ல குனிந்து ஸ்க்ரிப்ட்டை எடுத்து தன் மேஜை மீது பொத்தென்று போட்டார். பதிலுக்கு மேசை மீது இருந்த பேப்பர் வெயிட்டை என் கையில் எடுத்து பின்னர் அதை பொத்தென்று மேசையில் வைத்துவிட்டு போனேன். வளரும் கலைஞனுக்கு கோபம் கூடாது என்று ராம்கி அட்வைஸ் பண்ணினான்.
மயிலை நாட்டு சுப்பராய முதலி தெரு வில் வசித்து வந்த ஆஞ்சநேய உபாசகர் ஸ்ரீ ரமணி அண்ணா வீட்டில் தவமிருந்து பிரார்த்தித்தேன். மயிலை சாய்பாபா பிரகாரத்தை சுற்றினேன். எந்த கோவிலை பார்த்தாலும் கன்னத்தில் போட்டுக்கொண்டு எந்நேரமும் சிவந்த கன்னத்துடன் (Rosy cheeks!) விளங்கினேன்.
தெருவில் என்னையொத்த இளைஞர்கள் மனசுக்குள்ள பெரிய வியட்நாம் சுந்தரம் என்று நினைப்பு என்று காதுபட பரிகசித்தார்கள். கூத்தாடி என்றார் அப்பா. அம்மா மட்டும் நான் கதை எழுத பேப்பர் வாங்கி கொடுத்தாள்.
அப்போதுதான் நடராஜன் ( கவிதாலயா) , பாம்பே கண்ணன் போன்ற நண்பர்கள் அறிமுகம் ஆனார்கள். நடராஜன் ஒரு பக்கம் என்னை கேபியிடம் சேர்க்க படாதபாடு பட்டுக் கொண்டிருந்தார். நதிகளை ஒன்றாக இணைப்பதில் இருந்த தை விட அதிக சிரமம் அதில் இருந்தது .இன்னொரு பக்கம் பாம்பே கண்ணன் என்னை அவனது ஸ்கூட்டரில் பின்னால் வைத்துக் கொண்டு Fine Arts டூர் போனான். விவேகானந்தா கல்லூரி ஹாஸ்டல் மாணவர்களுக்காக என்னுடைய “ஓஹோ எந்தன் பேபி!” என்கிற நாடகத்தை போட்டான். திரு சோ ராமசாமியை போல நானும் அந்தக் கல்லூரியில் படித்த மாணவன் என்று அப்போதைய பிரின்சிபல் என்னை அறிமுகம் செய்தார்.
இதற்கிடையில் நடராஜனும் விஸ்வநாதன் ஆகிய நண்பர்கள் சேர்ந்து கொண்டு என் கதைகளை நாடகமாக போட்டார்கள். பணக்கார நண்பர் விஸ்வநாதனுக்கு நாடகம் முடிந்ததும் பாக்கிகளை செட்டில் பண்ணவே time சரியாக இருந்தது.அவருக்கு ஒரு ரோலை கொடுத்து விட்டால் போதும் அவர் பாட்டுக்கு தேமேன்னு இந்த காரியத்தை மகிழ்ச்சியாக செய்வார்.
இதற்கிடையில் பெங்களூரில் எனக்குவேலை கிடைத்தது.அங்கிருந்து நாடகங்களை எழுதி நடராஜனுக்கு அனுப்பி வைத்தேன். அதில் ஒரு நாடகம் அப்போது வெளிவந்த To Sir With Love என்கிற படத்தை தழுவியது. நடிகர் ஸ்ரீகாந்த வைத்து அந்த நாடகத்தை போடலாம் என்று நடராஜனும் விசுவநாதனும் உத்தேசித்தார்கள். ஆனால் ஸ்ரீகாந்த் அந்த நாடகத்தை மல்லியம் ராஜகோபால் என்கிற சினிமா தயாரிப்பாளர் வசம் ஒப்படைத்து விட்டார். மல்லியம் ராஜகோபால் அப்போது முகமூடி அணியாத குறையாக பிறர் கதைகளை கொள்ளை அடித்துக் கொண்டிருந்தார்.”இளைய தலைமுறை” என்ற பெயரில் அந்தப் படம் வெளிவந்தது. எனக்கு எந்த recognitionனும் கொடுக்கப்படவில்லை.
எனக்கும் கண்ணனுக்கும் frustration அதிகரித்துக்கொண்டே சென்றது. கண்ணன் அப்போது UAA குழுவில் நடித்துக் கொண்டிருந்தார். அவன் மூலமாகத்தான் எனக்கு Y G மகேந்திரன் , ஏ ஆர் எஸ் , மௌலி போன்றவர்கள் பழக்கம் ஆனார்கள். எனது ஜோக் ஒன்றை மௌலி வெகுவாக ரசித்தார்.ஒருவர் ஓடிவந்து கவாஸ்கர் அவுட் ஆகி விட்டார் என கத்துகிறார்.அதற்கு மற்றவர் இதென்ன பிரமாதம் நான் கூடத்தான் அவுட் ஆவேன்! என்பார். இந்த ஜோக்கை மௌலி வெகுவாக ரசித்தார். எனது ஹாஸ்ய எழுத்து நடையை பற்றி கண்ணன் ஏற்கனவே ஒய்ஜி மகேந்திரனிடம்
பிரஸ்தாபித்து இருந்தான். அதனால் நான் எப்போது கிரீன் ரூமுக்குள் நுழைந்தாலும் ஒரு கலகல வரவேற்பு இருந்தது. ஆனால் சத்தியமாக “யூஏஏ” குழுவிற்கு என் முதல் நாடகத்தை எழுதுவேன் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை. அந்தக் காலத்தில் சினிமாவுக்கு எப்படி ஒரு ஏவிஎமோ அதே மாதிரி நாடகத்திற்கு ஒரு UAA என்று பெயர் வாங்கி இருந்தது.
விஎஸ் ராகவன் பழக்கமானார்.
‘மேடம் ஜனா’ என்று பெண்ணை மையமாக வைத்து கதையை கொடுத்தேன். சவுகார் ஜானகியின் வீட்டிற்கு இட்டுச் சென்றார். கே பாலச்சந்தர் உட்கார்ந்து ‘எதிர்நீச்சல்’ script வாசித்த அதே சோபாவில் என்னையும் உட்கார வைத்து சவுகார் கதை கேட்டார். அதே சோபாவில் உட்கார்ந்தால்
மட்டும் போதுமா? எதிர்நீச்சலில் வந்த பட்டு மாமி போன்ற காத்திரமான பாத்திர அமைப்பு வேண்டாமா? வேண்டும் போல இருக்கு!
Many a slip between the cup and the lip என்று வியட்நாம் பத்மநாபன் பாணியில் சொல்லிக்கொண்டே வீடு திரும்பினேன்.
மௌலி தனியாக குழு ஆரம்பிக்க முடிவு செய்து “அந்தப்புரம்” போனபின் ஒய்ஜிபி அவர்களுக்கு ஒரு நாடக எழுத்தாளர் தேவைப்பட்டார். பாம்பே கண்ணன் என்னை பில்லியனில் ஏற்றிக்கொண்டு சிட்டாய் பறந்தான் ஒய்ஜிபி வீட்டிற்கு! நான் சொன்ன கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. திருமதி ஒய்ஜிபி ரொம்ப ஸ்ட்ராங்கா என்னையும் என் கதையையும் சிபாரிசு செய்தார். அப்போது குழுவிற்கு ஏ ஆர் எஸ் டைரக்டர். அவரிடம் கதைச்சுருக்கத்தை பற்றி பேச அவரது மவுண்ட் ரோடு சிம்சன் கம்பெனிக்குச் சென்றேன். சுருக்கமாக கதையைச் சொன்னேன். எத்தனை நாளில் ஸ்கிரிப்ட் கொடுப்பாய் என்று கேட்டார்.
5 நாட்களில் என்றேன். பிரமித்துப் போனார். ஆம் நான் ஐந்தே நாட்களில் எழுதி முடித்த நாடகம்தான் ரகசியம் பரம ரகசியம். அதை ஒய்ஜிபி , ஒய்ஜி மகேந்திரன் போன்றவர்கள் நிறைய மெருகு ஏற்றினார்கள். ஒய்ஜி மகேந்திரன் அப்போது நாடக உலக நாகேஷ்! ஏ ஆர் எஸ் டைரக்ஷன் திறமையும் மகேந்திராவின் நகைச்சுவை நடிப்பாற்றலும் ஒருங்கிணைந்து எனது முதல் நாடக படைப்பு நான் பிற்காலத்தில் எழுதப் போகும் 65 நாடகங்களுக்கு அன்று வித்திட்டது.
அப்போதெல்லாம் சினிமாவுக்கு குமுதம் என்றால் நாடகத்துக்கு ஆனந்த விகடன். அங்கே வி.எஸ்.வி என்று ஒரு மனிதர் இருந்தார். சரியான நாடக சுப்புடு.
இந்தியன் எக்ஸ்பிரஸில் கோபாலி ஆனந்த விகடனில் வி.எஸ்.வி , போதாதா? என் நல்ல காலம் , முதல் பாராட்டை கரும்பாய் வழங்கினார் விஎஸ்வி.
இன்னமும் இந்த நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்
ஒய்ஜி மகேந்திரன். நாடகம் ஆயிரத்தை தாண்டி விட்டது. லண்டனில் அகதா கிறிஸ்டியின் ‘மவுஸ் ட்ராப்’ என்கிற நாடகம் சிரஞ்சீவியாக இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. அந்த லிஸ்டில் ரகசியமும் சேர்ந்து விடும் போலத் தெரிகிறது. Director K . Balachander made use of a scene from this play in his
movie “Apoorva Raagangal.”
கவிதாலயம் இந்த நாடகத்தை படமெடுக்க நினைத்தது. நிறைவேறவில்லை.ஆனால் எவனோ ஒரு ஹாலிவுட் காரன் இந்த கதையை சற்று மாற்றி 5 வருடங்களுக்கு முன் ஆங்கிலத்தில் எடுத்திருக்கிறான். நான் பார்த்து விட்டு மகேந்திரனிடம் சொன்னேன். நீ எங்கே இருந்து எடுத்தியோ அங்கே திருப்பி போய் விட்டதாக வேடிக்கையாக கூறினான். சத்தியமாக ரகசியம் பரம ரகசியம் எனது ஒரிஜினல் திங்கிங்.
‘ஹாலிவுட் காரனே திருடுகிற அளவுக்கு நான் நன்றாக யோசித்து இருக்கிறேன் என்பதை நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது !’என்றேன் மகேந்திரனிடம். அப்படித்தான் சமாதானம் செய்துகொள்ள வேண்டும் என்றான்.