
முக்கியபடி மெதுவாகத் திறந்த லிஃப்டிலிருந்து அவசரமாக வெளியே வந்தேன்.
கோபத்தில் கண்கள் படபடக்க, ‘என்ன திமிரிருந்தா, அந்த செகரட்டரி என்னை இந்தக் கேள்வி கேட்டிருப்பான்? பத்திரத்தைக் காட்டி, அவன் வாயை அடைக்கிறேன்’ என்று கருவியபடி காரிடரில் நடந்தேன்.
கையிலிருந்த சாவியைப் பொருத்தி என் ஃப்ளாட்டின் கதவைத் திறக்க முயன்றேன். கதவு திறந்தே இருந்தது, பூட்ட மறந்திருக்கிறேன்…
உள்ளே சென்றேன். ஹாலில் சோஃபாக்கள், டிவி, தரை விரிப்பு எல்லாம் அந்நியமாகத் தெரிந்தன. நான்கு இறக்கைகள் கொண்ட ப்ரவுன் கலர் ஃபேன், எதிர் சுவற்றில் எரியும் குழல் விளக்கு எல்லாம் மாறியிருந்தன.
சே.. என்ன அவசரம்; இது என் ஃப்ளாட் இல்லை! ஒரே மாதிரியாகக் கட்டப்பட்டுள்ள, அடுக்கு மாடிக் கட்டடம்…
அவசரத்தில் லிஃப்டிலிருந்து நான்காம் மாடிக்கு பதில் மூன்றாம் மாடியில் வெளியேறியிருக்கிறேன்.
வெளியே வந்து சுற்றுமுற்றும் பார்த்தேன்; ‘யாரும் பார்க்கிறார்களா?’
படபடப்புடன் சடுதியில் படிகளைத் தாண்டி நான்காம் மாடிக்கு வந்தேன். என் ஃப்ளாட்டில் சாவியைப் பொருத்தினேன். நல்லவேளை, இன்று உடனே திறந்துகொண்டது.
எல்லாம் தெளிவாக இருந்த இடத்தில் இருந்தன. இருட்டு கூட மனதிற்குத் தெரிந்ததாக இருந்தது.
பத்திரத்தை மறந்து சோஃபாவில் சரிந்தேன்.
என் வீடுதான்!
