
ஒரு கவிஞரைப் பற்றி இன்னொரு கவிஞர் கவிதை புனைவது என்பது பல்வேறு தேசக்கவிஞர்களிடையே வழக்கமாக இருக்கிறது. டபிள்யூ.ஹெச்.ஆடன் டபிள்யூ.பி.யேட்ஸின் நினைவாக எழுதிய கவிதையும் ஜோசஃப் பிராட்ஸ்கி டி.எஸ்.எலியட் மறைந்ததை ஒட்டி எழுதிய கவிதையும் எனக்கு மிகவும் பிரியமானவை. பிராட்ஸ்கி எலியட் மறைந்தபோது பழைய சோவியத் யூனியனில் தலைறைவாக இருந்தார். எலியட் மறைந்து ஐந்து நாட்களுக்குப் பிறகுதான் பிராட்ஸ்கிக்கு தெரியவந்தது. உடனடியாக உணர்வெழுச்சியில் பிராட்ஸ்கி அந்தக் கவிதையை எழுதியாக நாம் அறிகிறோம். ரஷ்ய- உக்ரெய்ன் போர் ஆரம்பித்ததிலிருந்து உக்ரேனிய கவிகளின் படைப்புக்ளைத் தேடித் தேடி படித்து வருகிறேனா, அதில் இல்யா காமின்ஸ்கியின் ‘Dancing in Odessa” தொகுப்பில் ஓசிப் மாண்டெல்ஸ்டாம், பால் செலான், ஜோசஃப் பிராட்ஸ்கி, ஐசக் பாபெல், மரீனா ஸ்வெஸ்டேவா ஆகியோரைப் பற்றிய கவிதைகள் இருக்கின்றன. ஓசிப் மாண்டெல்ஸ்டாமின் மனைவி நடாஸ்டா அவருடைய எல்லா கவிதைகளையும் மனனம் செய்து அடக்குமுறைக்குத் தப்பியபின் அவற்றையெல்லாம் மீட்டுருவாக்கம் செய்ததை காமின்ஸ்கி குறிப்பிடுகிறார். இந்தக் கவிதையின் இடையே ஒரு உரை நடை பத்தி அடைப்புக்குறிகளுக்குள் வருகிறது. அதன் சுதந்தர தமிழ் மொழிபெயர்ப்பு: “ நடாஸ்டா தன்னுடைய பக்கத்திலிருந்து நிமிர்ந்து பார்த்து பேசுகிறார்: ‘ ஓசிப், அன்னா அக்மத்தோவா நாங்கள் மூன்று பேரும் நின்று கொண்டிருந்தோம். திடீரென மாண்டல்ஸ்டாம் மகிழ்ச்சியில் உருகிக்கொண்டிருந்தார். அங்கே தங்களை குதிரைகள் என கற்பனை செய்துகொண்ட சிறுமிகள் ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் முதலாவது வந்த சிறுமி நின்று பொறுமையில்லாமல் கேட்டாள்: ‘எங்கே எனது கடைசிக் குதிரை?’ நானும் அக்மத்த்தோவாவும் மாண்டல்ஸ்டாமின் கைகளைப் பற்றி தடுத்து நிறுத்தினோம். “எங்களிடமிருந்து ஓடிவிடாதே நீதான் எங்கள் கடைசிக்குதிரை”.
எத்தனை கமிசார்களைத் தாண்டி இந்தக் குதிரை என்னை வந்தடைத்திருக்கிறது.
