குந்தவை எழுதிய இறுக்கம் என்ற சிறுகதை ஒரு பார்வை/பானுமதி.ந


மார்ச் மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற விருக்ஷம் கதைஞர்களை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சியில் திருமதி குந்தவை அவர்கள் எழுதிய இறுக்கம் என்ற சிறுகதையைப் பற்றி நான் பேசியதன் கட்டுரை வடிவம்.
போர்ச் சூழலால் பதட்டத்தில் எப்போதுமே வாழும் மனிதர்களின் கையறு நிலையை ஒரு பெண் கதாபாத்திரம் மூலமாக ஆசிரியர் இதில் தந்துள்ளார். போர் என்பது மனித நாகரிகத்தின் படுகுழி. கருத்து மோதல்கள், உணர்வுகள் மதிக்கப் படாமல் இருத்தல், இத்தனைக்கும் மேலாக வாழ்ந்த நாடும், இருந்த வீடும் ,சுவைத்த நீரும், சுவாசித்த காற்றும் இனி உன்னுடையது அல்ல, நீ சொந்த தேசத்தில் இருக்கும் இரண்டாம்தர பிரஜை என்பது எத்தனை வலியை கொண்டு வரும் என்பதை அளவிற்கு மீறாமல் ஆணித்தரமாக இதில் காட்டியுள்ளார் ஆசிரியர்.
மோட்டார் சைக்கிளில் கதை ஆரம்பமாகிறது .ஆமிக்காரர்கள், அந்த நபரை நிறுத்தி அவர் சைக்கிளை, பின் சீட்டை, பிளாஸ்டிக் கூடையை சோதனை இடுகிறார்கள். கதையின் நாயகிக்கு சிரிப்பு வருகிறது. யாராவது இவ்வளவு வெளிப்படையாக குண்டை எடுத்துக்கொண்டு வருவார்களா என்று.
எனினும் இவளுக்கும் பயம் வருகிறது .தான் சிரித்ததைப் பார்த்து அவர்கள் அருகில் வந்து உன் கைப்பையில் குண்டு இருக்கிறதா என்று சோதிக்கக் கூடும் என சிந்திக்கவும் செய்ககிறாள்
தன்னை இப்படி நடுவழியில் இறக்கி விட்டுப் போன தேவன் மீது கோபம் வருகிறது அதேநேரம் மனம் நினைக்கிறது எதிர்காற்றில் தன்னையும் வைத்து இத்தனை தொலைவு ஓட்டிக்கொண்டு வந்தவன், அவன் மேலும் சிரமப்படக் கூடாது என்று.. ஆசிரியர் எண்ணங்களின் போக்கை கதையில் நெசவு செய்திருப்பது அருமையாக இருக்கிறது. யாழ்ப்பாணம் போகும் பஸ் வருமென்று காத்திருக்கிறாள் அவள்.
முன்னரே வந்த மினி பஸ்சை கூட்டம் அதிகம் என்று தவற விட்டிருக்கிறாள். சிந்தனையின் நடுவே ஒரு காட்சி- சைக்கிளில் ஏழெட்டு வாழைக்குலைகளை ஒருவர் இடப்பக்கத்தில் இருந்து எடுத்து வருகிறார். நீர்வேலியில் இருந்து நெல்லியடியில் விற்பனை செய்வதற்காக இத்தனையை ஓட்டிக்கொண்டு வருகிறார்,. அவரை இவர்கள் இறங்கச் சொன்னால் அவர் மீண்டும் ஏற் சிரமப்படுவார் என்று இவளுக்குத் தோன்றுகிறது. ஆமிக்காரன் அவரை போகச் சொல்லும் போது இவளுக்கு நிம்மதியாக இருக்கிறது. பைரவர் கோயிலுக்கு போய் விடலாம் அங்கு நிழல் இருக்கும் மனிதர்கள் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் நடக்கத் தொடங்குகிறார். வலப்பக்கத்தில் இருந்து சைக்கிளில் ஒருவர் பானைகளைக் கட்டி எடுத்து வருகிறார். வாழைக் குலைகள் பசுமையை குறிப்பது என்றால் இந்தப் பானைகள் உடையக்கூடிய சாத்தியத்தை சொல்கிறது. வாழ்வும் அதன் பதட்டமும் இந்தக் காட்சியில் ஆசிரியர் திறமையாக காட்டுகிறார். அச்சுவேலி சந்தைக்கு பானைகள் போகின்றன.
கோவிலின் ஓட்டுக் கூரை தெரிகிறது. மனித நடமாட்டம் இல்லாத சாலை, பின்கழுத்தில் சுடும் சூரியன், தொப்பியோ,குடையோஎடுத்து வராத தன்னிலை இதெல்லாம் சிந்தையில் வருகிறது. இதுவே மாலை நேர நடையாக இருந்தால் எவ்வளவு அருமையாக சூரியனின் வண்ணக்கோலம் பார்த்துக் கொண்டே நடக்கலாம் அதன் பிறகு இரவின் எழிலும் எத்தனை நன்றாக இருக்கும். பேசாமல் இலங்கையர்கோன் காலத்திலாவது பிறந்திருக்கலாம் அல்லது ஐம்பது வருடங்களுக்கு முன்னர் ஆவது…. ஒரு சிறந்த செய்தியை இதில் ஒளித்து வைத்துள்ளார் ஆசிரியர். தன் மக்களைக் காப்பாற்றிய இலங்கையர்கோன். ஆனால் இப்போதைய அரசு அந்த நாட்டின் ஒரு பிரிவு மக்களை அடிமைப்படுத்தத் துடிக்கிறது உரிமைகளை மறுக்கிறது. அவர்களின் மொழிக்கான உரிமைகள் புறம் தள்ளப்படுகின்றன.
பங்களாதேஷ் உருவான வரலாற்றை நாம் நினைத்துப் பார்க்கலாம். பங்களாவிற்கும், உருது மொழிக்கும் இடையே சிக்குண்ட பிராந்தியம் பின்னர் தன் சுதந்திரத்தைப் பெற்றது.
50 வருடங்களுக்கு முன்னர் பிறந்திருந்தால் சலங்கை கட்டிய மாட்டுவண்டியில் அரிக்கன் லாந்தரோடு இனிமையான பயணம் செய்திருக்கலாம் என அவளுக்குத் தோன்றுகிறது. இங்கே ஏதோ ஒரு படத்தில் ஜானகி பாடிய’ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி’நம் காதுகளில் கேட்கிறது ஒருகால் அப்போது கொள்ளிவாய்ப் பிசாசுகள் கூட அவள் பார்த்திருக்கலாம் என நினைக்கிறாள். அதை நிலம் வெளிப்படுத்தும் வாயு என அறிந்திருப்போமா எனவும் சிந்திக்கிறாள். ஆனால் இப்போதும் எத்தனை கொள்ளிவாய்ப் பிசாசு களை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைவு ஓடுகிறது. ‘ஹெலி அடிச்சு போட்டு தாம். சிமெண்ட் குழாய்களுக்குள் நாங்க பதுங்கினோம். ஆனா கந்தசாமி அண்ணன்….’
‘வல்லை வெளியில் யாரையோ அடிச்சு போட்டு தாம்.’
ராணியக்கா சொன்னது நினைவிற்கு வந்தது. மினி பஸ்ஸில் நிறைய கூட்டத்துடன் போய்க் கொண்டிருக்கையில் துரத்தி வந்த ஹெலியும், விரைவாக ஓட்டி காப்பாற்றிய டிரைவரைப் பற்றியும் அன்று சொன்னால் அல்லவா? ஏன் பயப்பட வேண்டும்? பைரவர் கோயிலுக்கு வந்து விட்டாள். அங்கே மனிதர்கள் இருந்தார்கள். மரநிழல், மர இலைகள் வடித்துக் தரும் காற்று, மனிதர்களின் அண்மை, புதுப்பிக்கப்பட்ட கோயிலின் அழகு அனைத்தையும் பார்க்கிறாள். முன்னர் அந்தக் கோயிலின் பின்னே இருக்கும் பாழ் கிணற்றை பார்க்கப் போய் அதை ஒட்டி துவக்குடன் இருந்த ஆமிக்காரன் நினைவில் வருகிறான். இதில் ஒரு மர்மத்தை வைக்கிறார் ஆசிரியர். பாழ் கிணறு, துவக்குடன் ஆமிக்காரன் வாசகனின் யூகத்திற்கு இங்கே இடம் கொடுக்கிறார்.
மினி பஸ் வருகிறது கண்டக்டர் பஸ் நிற்கும் முன்பே பயணிகளிடம் வசூலித்த நேர்த்தி காசுகளை கோயிலில் செலுத்த இறங்கி ஓடுகிறார். இவள் உள்ளே ஏறி டிரைவர் இருக்கைக்கும், பயணிகளின் இருக்கைக்கும் இடையே இருக்கும் சிறிய இடைவெளியில் தன்னை புகுத்திக் கொள்கிறாள். சிறுது நேரத்தில் டிரைவரும் இறங்கி கோயிலை நோக்கிச் செல்கிறார். அவர்கள் இருவரும் கோயிலை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பதை பார்க்கிறாள். என்ன நேர்த்திக்கடனோ என நினைப்பவள் தானும் சக பயணிகளும் தனியே விட்டு விடப்பட்டதாக ஒரு பிரமையில் ஆழ்கிறாள்..
உணர்ச்சியை தூண்டும் வண்ணம் எழுதக்கூடிய கரு, நிதானம் தவறாமல் கையாண்ட விதத்தில் நல்ல வடிவம் எடுத்துள்ளது. போரின் நடுவே வாழ்வது என்பது மரண தண்டனையை விட மோசமானது. அதை விடவும் பாதிக்கக்கூடியது எப்போதுமே பதட்டத்தில் வைத்திருக்கும் சூழ்நிலை. தாம் பிறந்த மண்ணை நேசிக்காத மனிதரில்லை. அதைவிட்டு புலம் பெயர்வது, அதுவும் அகதிகளாய் மற்றொரு நாட்டில் தஞ்சம் அடைவது எத்தனை கொடுமை. மிகச் சிறப்பாக, சிறு வாக்கியங்களில் அருமையாக எழுதப்பட்ட நல்ல கதை. நம் தமிழும், இலங்கை தமிழும் மணக்கும் நடை. படிக்க வேண்டிய கதை.