கம்பன் கவியமுதம்/வளவ.துரையன்

                     

ஈகையும் விருந்தும்
பெரும்த டங்கண் பிறைநுத லார்க்குஎலாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே [68]

இப்பாடலில் கோசல நாட்டுக் கல்வி, விருந்தோம்பல், மற்றும் ஈகைப் பண்பு ஆகியவற்றைக் கம்பன் காட்டுகிறான். இப்பாடலில் அந்நாட்டுப் பெண்கள்தாம் கூறப்படுகிறார்கள். அவர்களின் அழகு முதலில் கூறப்படுகிற்து.
அவர்கள் மிகப் பெரிய கண்களைக் கொண்டிருந்தார்கள். மேலும் அவர்களின் நெற்றியானது பிறைச் சந்திரன் போன்று இருந்தது. அவர்களிடம் செல்வம் நிறைய இருந்தது. அச்செல்வத்தைக் கம்பன் ’பொருந்து செல்வம்’ என்கிறான். அதாவது அது நிலை பெற்ற செல்வமாம். அவர்களை விட்டுப் போய்விடாதாம். மேலும் அம்மகளிர் கல்வியறிவு நிரம்ப வாய்க்கப் பெற்றிருந்தார்கள். அக்காலத்திலேயே பெண் கல்வி இருந்தது இதன் மூலம் தெரிய வருகிறது.
செல்வம், கல்வி இரண்டும் இருந்ததால் அவர்களிடம் நல்ல குணங்கள் இயல்பாகவே இருந்தன. அதனால் அவர்கள் தங்களிடம் வருத்தமடைந்து வந்தவர்க்கு அவர்கள் வேண்டிய பொருள்களைக் கொடுத்தார்கள். வந்த விருந்தினரை மிகவும் உபசரித்தார்கள். நாள்தோறும் அவர்கள் செய்ய வேண்டியது இச்செயல்கள் அன்றி வேறொன்றும் இல்லையாம்.
இப்பாடல் மூலம் விருந்தினரை உபசரித்தல், ஈகை ஆகியவற்றுக்கு இன்றியமையாதன செல்வமும், கல்வியும் என்பதும் தெரிய வருகிறது.