இவர் ஒரு பண்டிதர்/கிரிதரன் நவரத்னம்

இவர் ஒரு பண்டிதர். கலாநிதி. அறிவியல், வரலாறு, கவிதை, கட்டுரை, நாவல் என இலக்கியத்தின் பன்முகத்திறமை மிக்க எழுத்தாளர். முக்கியமான மரபுக் கவிஞர். தமிழ் மொழியின் மீது தீராத பற்று மிக்கவர். அதனை இவரது கவிதைகள், கட்டுரைகள், நூல்கள் வெளிப்படுத்தும். இலங்கையில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் அனைத்து விருதுகளும் இவருக்குக் கிடைத்துள்ளன. இருந்தும் இலங்கைத் தமிழ்க் கவிதைகள், படைப்புகள் பற்றி எழுதும் பலரும் மிகச் சாதாரணமானவர்களைப்பற்றியெல்லாம் குறிப்பிட மறப்பதில்லை , ஆனால் இவரை மறந்து விடுவார்கள். ஏன்? ‘இருபதாம் நூற்றாண்டுத் ஈழத்தமிழ் இலக்கியம்’ நூலில் கூட இவரது கவிதைப்பங்களிப்பு பற்றிக் குறிப்பிடப்பட்டதாகத் தெரியவில்லை.

இவரது கவிதைகள், கட்டுரைகள், நூல்கள் பலவும் மீள்வாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். அதன் மூலம் இவரது அளப்பரிய இலக்கியப் பங்களிப்பை இன்றைய தலைமுறையினரும் அறிந்துகொள்ள முடியும்.

இவர் மீதான இலக்கிய இருட்டடிப்பு காரணமாக நானும் கூட இவரது படைப்புகளைப்பற்றி பெரிதாக, அண்மைக்காலம் வரையில் கவனத்திலெடுத்திருக்கவில்லை. எடுத்தபோது இவரது பங்களிப்பு என்னைப் பிரமிக்க வைத்தது.

இவர்தான் எழுத்தாளர் க.சச்சிதானந்தன். “சாவில் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன்
சாம்பல் தமிழ்மணந்து வேகவேண்டும்” என்னும் புகழ்பெற்ற வரிகளுக்குச் சொந்தக்காரர். அவரது ‘தமிழ்க்கவிப்பித்து’என்னும் கவிதையின் ஈற்றடிகள் அவை. அவரது இவ்வரிகளையும் “ஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும் ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்” என்னும் கவிஞர் இராஜபாரதியின் கவிதை வரிகளையும் போட்டுக் குழப்பிக் கொள்வோர் பலர். சிலோன் விஜேந்திரன் தொகுத்த ஈழத்துக் கவிதைக்கனிகள் தொகுப்பு நூலில் கவிஞர் இராஜபாரதியின் இவ்வரிகளைக்கொண்ட கவிதையை வாசித்திருப்பதாக நினைவு.

எழுத்தாளர் க.சச்சிதானந்தனை, பண்டிதர் க.சச்சிதானந்தனை என் யாழ் இந்துக்கல்லூரிக் காலகட்டத்தில் அறிந்திருக்கின்றேன். ஆனால் அவரது படைப்புகளை அப்போது நான் வாசித்திருக்கவில்லை. என்னுடன் படித்த சக மாணவனான கணநாதன் தந்தையார்தான் பண்டிதர் க.சச்சிதானந்தன் என்று அறிந்திருக்கின்றேன். கணநாதன் ஒருபோதும் தனது தந்தையாரைப்பற்றி எமக்குக் கூறியதில்லை. ஆனால் பத்தாம் வகுப்பில் எமக்குச் சமயம் படிப்பித்த ஆசிரியர் சோமசேகரசுந்தரம் (‘சோமர்’)எப்பொழுதும் அவனிடம் அவனது தந்தையாரான பண்டிதர் க.சச்சிதானந்தனைப்பற்றி விசாரிப்பார். அதன் மூலமே அவனது தந்தையின் இலக்கியப் பங்களிப்பு பற்றி முதன் முதலில் அறிந்துகொண்டேன்.