இன்றோடு அப்பா மறைந்து ஐந்து ஆண்டுகள் சென்றுவிட்டன /ராமகிருஷ்ணன் தியாகராஜன்

ரஷ்யா-உக்ரேன் போர் நடைபெற்றுகொண்டிருக்கின்ற இவ்வேளையில் அப்பாவின் ஞாபகம் அதிகமாகவே வருகிறது. அமெரிக்க/மேற்கத்திய இலக்கிய படைப்புகளின் தாக்கம் அப்பாவின் மீது அதிகமாகவே இருந்தாலும் அப்பாவிற்கு ரஷ்யாவின் மீது தனி கவனம் மற்றும் ஈர்ப்பு இருந்தது.

 அப்பா வாழ்ந்த காலக்கட்டத்தில் பெரும்பாலான பகுதியில் ரஷ்யாவின் அபிமானியாக இருக்கவேண்டுமென்றால்  ஒருவர் முதலில் கம்யூனிஸ்டாக இருக்கவேண்டும் என்ற முத்திரையை சுமத்தப்பட்டது. இன்றைக்கும் பெரிய மாற்றங்கள் இருக்கிறதாக நான் உணரவில்லை. 

ஆனால், அப்பா ரஷ்யாவை ரஷ்ய மக்களை ரஷ்ய இலக்கியத்தை ஒர் அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகவில்லை. மனிதநேயம் மற்றும் இலக்கியரசம் போன்றவற்றோடுதான் அணுகினார். இரண்டாம் உலகப்போரில் ரஷ்யாவின் பங்கை சரியாக மேற்கத்திய வரலாற்று நிபுணர்கள் பதிவு செய்யவில்லை என்ற நிலைப்பாட்டை வைத்திருந்தார். கோர்பசேவ்வின் “சீர்திருத்தங்களை”ப் பற்றி அவருடன் 1985-86 வருடக்காலத்தில் விவாதித்த பொழுது, நான் கூறியதை கவனமாக கேட்டகொண்ட பிறகு, எவ்வளவு நாள் அவர் தாக்குப் பிடிக்கிறார் என்பதை கவனிக்கவேண்டும் என்று மட்டும்தான் பதில் கூறினார்.