இனிக்கும் தமிழ் – 112   – டி வி ராதாகிருஷ்ணன்

சித்தர் பாடல் – நந்தவனத்தில் ஓர் ஆண்டி

பாடல் என்னமோ எளிய பாடல் தான். பாடல்

நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

பொருள்

 தோண்டி என்றால் மண் அல்லது தண்ணீர் கொண்டு வரும் ஒரு சிறு மண்
பாத்திரம். பொதுவாக அதில் தண்ணீர் கொண்டு வருவார்கள். கஷ்ட்டப்பட்டு ஒரு
மண் கலயத்தை பெற்று, அதை சரியாக கையாளாமல் கீழே போட்டு உடைத்து விட்டான்
அந்த ஆண்டி.

கடுவெளி சித்தரின் பாடல்.

இப்பாடலில் என்ன சொல்ல வருகிறார்? உட்கருத்தைப் பார்ப்போமா?

ஆண்டி என்பது நம் உயிர். ஆன்மா.

குயவன், இறைவன்.

தோண்டி, இந்த உடம்பு.

இந்த உடம்பை பெற்று என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? சாப்பிடுகிறோம்.
தூங்குகிறோம். பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறோம். அவர்களை வளர்க்கிறோம்.
டிவி பார்க்கிறோம். என்று ஒரே ஆட்டமும், பாட்டமுமாக இ இருக்கிறது. இப்படி
கொஞ்ச நாள் போனால், இந்த உடம்பு விழுந்து விடும். அதாவது, மண் பாண்டம்
உடைந்து விடும்.

இந்த உடம்பை பெற்றதன் நோக்கம் என்ன என்று அறிந்தோமா? அல்லது, அப்படி
எல்லாம் ஒரு நோக்கமும் இல்லை. இருக்குற வரை ஆண்டு அனுபவித்துவிட்டு
போவதுதான்  அதன் நோக்கமா? இந்த உடம்பை இன்னும் கொஞ்ச உயர்ந்த வழியில்
ஈடுபடுத்த முடியுமா? அல்லது இவ்வளவுதானா? கடைசியில் போட்டு
உடைத்துவிட்டுப் போக வேண்டியதுதானா?

மேலோட்டமாக இப்பாடலில் எதுவுமே இல்லை என்று சொல்லாமல் ,எப்படிப்பட்ட
உயரிய விஷயங்களை சொல்கிறது இப்பாடல் என்பதை யோசிப்போமாக!