எஸ். சண்முகம் கவிதை

அறையின் கதவு திசைமாறி இருப்பதை
விழித்ததும் பார்க்க நேரிட்டது
எதிர்திசையில் அல்லாது பக்கவாட்டில் நகர்ந்துள்ளதைப் பற்றி யோசிக்கும் போது
சாளரத்தின் ஞாபகம் துளிர்க்க
அதுவும் பெயந்திருப்பதை கவனித்தேன்

மின்விசிறி மட்டும் மேலே புள்ளிவிலகாமல்
சுழல்வது தெரிகிறது
மின்விளக்கின் மிகையொளி வசிப்படத்தின்
வாழ்வுணர்வை மாறாட்டமாக்கி உள்ளபோதும்

என் உடல்மணத்தில் வேறுபாடு இல்லை
சுவர்களின் இளம்பச்சை வண்ணத்தில்
ஒருவாரமாக உண்ணத் தவறிய
பச்சை ஆப்பிள் வதங்காது
வைத்த இடத்தில் அவ்வண்ணமே இருக்க

அதை உண்ணாது பார்த்தலில்
மீண்டுமொருமுறை
எல்லாம் அங்கேயே.