சொடுக்கு கதைகள்/ ஆர். வத்ஸலா

  1. “சீர் உங்கள் இஷ்டம் போல” என்று கூறி விட்டனர் மாப்பிள்ளை வீட்டார் கோடிச்வர
    சம்பந்தியின் ஒரே சந்ததிக்கு.
  2. காதலித்து மணம் புரிந்தார்கள் அந்தஸ்து சாதி மதம் மொழி சரி பார்த்துக் கொண்டு.
  3. வெளியே போய் பணி செய்யும் சுதந்திரத்தை மனைவிக்கு அளித்துள்ள பரந்த
    மனப்பான்மையுடைய கணவன் அவளுக்கு இரட்டை பணிச்சுமை என்பதால் வங்கியிலுள்ள
    அவர்களுடைய கூட்டுக் கணக்கை இயக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இருக்கிறான்.
  4. ஒரு ஜாதகத்துக்கு ஒரு கேள்விக்கு மட்டுமே பதிலளிக்கும் ஜோதிடரிடம் தனது தாயார்
    மற்றும் மாமியார் ஜாதகங்களை காண்பித்து கேட்டாள் கவலையுடன் இரண்டு கேள்விகள் , “
    இவங்களுக்கு நல்ல மருமக வருவாங்களா? இவுங்க ஆயுசு எப்படி?”
  5. “கண்ணாடி பார்த்தால் உன் முகம் தெரிகிறது” என்று காதலியிடம் சொன்னவன்
    அவள் மனைவியான பிறகு கண்ணாடியே பார்ப்பதில்லை.
  6. தன் நாக்குக்கு வாகாக அமர்ந்திருந்த பூச்சியை விரட்டி தன்னை பட்டினி
    போட்டவன் வீட்டு சாம்பாரில் குதித்தது பல்லி.