சொடுக்குக்கதைகள்/புஷ்பா விஸ்வநாதன்

1) தனியாக வைக்கப்பட்டிருந்த ஒரு முழ குண்டு மல்லிச்சரத்தை ஆசையாய் எடுக்கக் கைவைத்த சரசுவின் கையைத்தட்டி விட்டாள் பூக்காரி. ” ஏன் அதை உன் தலையில் சூட்டிக் கொள்ள வைத்திருக்கிறாயா” என்று ஆங்காரத்துடன் சரசு வினவ “இல்லை. என் புருஷனின் போட்டோவுக்குச்சூட்ட” என்று கண்ணீர் மல்க உரைத்தாள் அந்த இள வயதுப் பூக்காரி.

2) வீட்டுக்குப் புதிதாய் வந்த மருமகள் போட்ட ரங்கோலிக்கோலத்தால் ஏமாற்றமடைந்து திரும்பியது தினமும் அரிசிக்கோலத்தைத் தின்ன வரும் எறும்பு.

3) காலை ஆறு மணிக்கு காபிக்கோப்பையுடன் மனைவி சுசீலாவை எழுப்பிய ஸ்ரீ தரன் சொன்னான், ” நாளை யிலிருந்து இந்த உபசாரங்களை எதிர் பார்க்காதே. என் அம்மாவும், அப்பாவும் நாளை இங்கு வருகிறார்கள்” என்று. இரண்டு நாட்கள் கழித்து சுசீலா விடம் மாமியார் சொன்னாள் ” ஸ்ரீ தரனை வீட்டு வேலைகளில் உனக்கு உதவி செய்ய பழக்கு. என்னை மாதிரி மக்காக இருந்து விடாதே” என்று.

4) புடவை வாங்க வந்த பெண்களுக்கு புடவையைப்பிரித்து தன்தோள்மேல் போர்த்திக் காட்டினாள் புடவைக்கடையில் வேலை செய்யும் ராதா, தான் கட்டியிருந்த புடவையின் தோள்பட்டைக்கிழிசலை மறைக்க முயன்று.

5) “இரண்டு சின்னக் குழந்தைகளுடன் உன்னைத்தனியே கை விட்டுப்போன குடிகாரக்கணவனை இப்போ மறுபடி இத்தனை வருடங்களுக்குப் பிறகு ஏன் சேர்த்துக்கொண்டாய் ?” என்று கேட்ட வீட்டுக்காரம்மாவிடம் வேலைக்காரி சொன்னாள், ” குடித்துக்குடித்து உடம்பைக்கெடுத்துண்டு நோயாளியா அனாதை போல வந்த அவனை புருஷனா இல்ல, ஒரு குழந்தையா நெனச்சு சேத்துண்டேன் தாலி கட்டிண்ட பாவத்துக்காக”.

One Comment on “சொடுக்குக்கதைகள்/புஷ்பா விஸ்வநாதன்”

  1. சற்று நகை (மிகையாக இல்லை) இருந்தாலும், கருத்தும், உள்ளார்ந்த சமூக அக்கறையும் ,அதனால் வரும் சோகமும் உண்டு!

Comments are closed.