ஜெயதேவன் கவிதை

இன்பத்தின் தலைமுடியைத் தொட்டேன்
அங்கே தொடங்கியது துன்பம்
வண்ணங்களை கண்டுகண்டு
சோர்ந்துவிட்டன கண்கள்
இருட்டே இப்போது
இதயம் கவர்ந்த வண்ணமாகிறது
சங்கீதங்கள் திகட்டிய பின்
மெளனமே தான்சேனின்
இசையாகிறது.
முயல் ரோமமாயினும்
முடிவில்லாமல் வருடினால்
காய்கட்டித்தான் போகின்றன
கைகள்
பூக்கள் மீதாயினும்
மிதித்துமிதித்து
கன்றிவிடுகின்றன கால்கள்
மயிலிறகேயானாலும்
தொடர்ந்துவிழுந்தால்
காயம்பட்டுத்தான் தீரும்
உடம்பு
அளவான அனுபவமே வாழ்வை
வசியம் செய்யும்
அளவற்ற அனுபவத்தால்
பொருள் தன் ஆன்மாவை இழக்கும்
குருவி எப்போதும் உட்காராது
ஒரே கோபுர உச்சியில்
வானமே கிடைத்தாலும்
அது கேட்கும் வானத்தின்
மேலொரு வானம்
புத்தன் ராஜாவாகவே இருந்திருப்பான்
கபிலவஸ்துவில்..
அளவோடு சுகித்திருந்தால்
எல்லோரையும் புத்தனாக்காது
மிகை அனுபவம்
புத்தன் மட்டுமே
புத்தனாகலாம்.