யுவ புரஸ்கார் விருது விழா – நாள் 1 – சில குறிப்புகள்/கார்த்திக் பாலசுப்ரமணியன் 

:இவ்விழா, ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு மாநிலத்தில் நடைபெறும். இந்த வருடம் தமிழ் நாடு. ஒரு வகையில் தமிழுக்கான விருதை இங்கு வைத்து வாங்குவதில் மகிழ்ச்சி என்றாலும் இதைச் சாக்காக வைத்து ஊர் சுற்றலாம் என்று திட்டமிட்டது வீணாகிவிட்டது. சென்னையில் நடைபெற்றது என்ற போதும் வழக்கமாக வரும் இலக்கிய நண்பர்கள்கூட வரவில்லை. வார நாள், இடம், சரியாகத் தகவல்கள் சென்று சேராதது போன்றவை முக்கியமான காரணங்கள் என்று அறிகிறேன்.மலையாளத்துக்காக பரிசு பெறும் மொபின் மட்டும் விழாவுக்கு முன்னரே கொஞ்சம் அறிமுகம். அவர் தன்னுடைய ‘ஜகரந்தா’ என்னும் நாவலுக்காக பரிசு பெற்றார். நேற்று சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘மலையாளத்தில் யாரையாவது வாசித்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார். ‘ஓ, பஷீரிலிருந்து உண்ணி.ஆர் வரை வாசித்திருக்கிறேன்.’ என்றேன். இதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை போல. கொஞ்சம் தயங்கி, ‘மலையாள எழுத்தாளர்கள் தமிழில் கிடைப்பதுபோல ஏன் தமிழ் எழுத்தாளர்கள் இங்கே வரவில்லை?’ என்றார். அடுத்த கணம் அவரே, ‘இது எங்கள் தவறுதான்.’ என்றார்.தமிழில் யுவ புரஸ்கார் பெற்ற நாவல்களை ஆய்வு செய்யும் கவிதாவுடன் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தேன். மந்திர மூர்த்தி அவர்கள் நிறைய பேரை அறிமுகப் படுத்தி வைத்தார். என்னால்தான் யாரிடமும் இருந்து பேச முடியவில்லை. வந்திருந்த வாசு, பரிசல் அண்ணன், அரி சங்கர் போன்றவர்களிடம் கூட அதிக நேரம் செலவிட முடியவில்லை. பிறகு அழைத்துப் பேச வேண்டும்.விழா மேடையில் நாற்காலிகள் ஆங்கில எழுத்துக்கள் வரிசைப்படி அமைக்கப்பட்டிருந்தன. தமிழ் ஓர் ஓரத்துக்கு வந்துவிட்டது. பக்கத்தில் தெலுங்கிலிருந்து கவிதைக்காக பரிசு பெற்ற கோபால் அமர்ந்திருந்தார். அவருடைய கவிதை நூல் தலைப்பு ‘தண்டகடியம்’. அப்படியென்றால் கைகளில் கட்டும் ஒருவகைக் காப்பாம். கிராமத்துப் பின்னணியில் அமைந்த மண் சார்ந்த கவிதைகள் போலும். கவிஞர் றாம் சந்தோஷ் அப்புத்தகம் ஒன்றை வாங்கிப் போயிருக்கிறான். ஒன்றிரண்டு கவிதைகளை மொழிபெயர்த்துத் தரக் கேட்டிருக்கிறேன். வந்திருந்த பெரும்பாலனவர்களுக்கு ஆங்கிலம் அவ்வளவு பரிச்சயமில்லை. சென்னையில் யாருக்கும் இந்தி தெரியாது. போட்டோகிராபர் என்ன சொல்கிறார் என்று என்னிடம் கேட்டால், நான் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னது அவர்களுக்குப் புரியவில்லை. எழுத்தாளர் எஸ்.ரா. பேசிக்கொண்டிருக்கையில் பக்கத்திலிருந்த சிந்தி மொழி எழுத்தாளர் ராகேஷ் தலையை ஆட்டி ஆட்டி ஆமோதித்துக்கொண்டு, “அவர் நன்றாகப் பேசுகிறார். எனக்குத் தான் ஒன்றும் புரியவில்லை.” என்றார். இத்தனைக்கும் எஸ்.ரா. தன்னுடைய உரையை ஆங்கிலத்திலும் எழுதி ஆளுக்கு ஒரு நகல் எடுத்தும் கொடுத்திருந்தார். ராகேஷ் தான் எழுதிய நாடகத்துக்காக பரிசு பெற்றார்.முதல் நாள் பரிசு பெறும் நிகழ்வு மட்டுமே. விழா முடிந்து ஆளாளுக்கு போட்டோ எடுத்துக்கொண்டிருந்தோம். ஒரு பக்கம் தமிழுக்காக, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் காத்திருக்க அவர்களோடு இணைந்து ஒரு திராவிட செல்ஃபி எடுத்துக்கொண்டேன்.வந்திருந்தவர்களில் சந்தாலி மொழிக்காக பரிசு பெற்ற குனாவின் ஆடை அனைவரையும் ஈர்த்தது. பாரம்பரியமும் நவீனமும் சேர்ந்த கலவையாக உடுத்தி வந்திருந்தார். உற்சாகமாக தென்பட்டார். முதல் நாளில் பேச வாய்க்கவில்லை.விழாவுக்காக ஊரிலிருந்து மெனக்கட்டு வந்திருந்த றாம் அழகிய புத்தர் சிலை ஒன்றையும் எஸ். சண்முகத்தின் ‘மொழியின் மறுபுனைவு’ நூலையும் பரிசளித்தான். அன்புகள் றாம்.விழா அரங்கத்துக்குள் காலடி வைக்கும் முன்னரே வாட்ஸ் அப் குரூப் ஒன்றை ஆரம்பித்துவிட்டார்கள். வரிசையாக குட் மார்னிங்களால் நிரம்பி வழிகிறது. எல்லோரும் இரண்டாம் நாள் நிகழ்வுக்குத் தயாராகுகிறார்கள் போல. நானும் கிளம்புகிறேன். மீதியை வந்து எழுதுகிறேன்.O