கவிதைக்குப் பொய்யழகு/லாவண்யா சத்யநாதன்

முட்டைக்கு முடிதிருத்தும்
நாய்களுக்கு உண்ணி பறிக்கும்
வேலையைப் பார்த்தோமா
வேளைக்குண்டோமா
சினிமாவோ சீரீயலோ பார்த்தோமா
செய்திப் பொய்களை
ஒருகாதில் வாங்கி இன்னொரு காதுவழி விட்டோமா
படுத்துறங்கினோமா என்றில்லாமல்
இருப்புக்கொள்ளாமல் கவிதை எழுதினேன்.
கவிதையெழுதுவதற்குப் பதிலாய்
கீரை ஆய்ந்து கொடுத்தால்
ஒட்டடை அடித்தால் வீட்டுக்குப் பயனுண்டென்று
ஒவ்வொருமுறையும் மறக்காமல் சொல்வாள் மாதங்கி.
என் அனுதாபியான பதிப்பாளர் ஒருவர்
என் கவிதைகளைத் தொகுப்பாக்கி
புத்தகச் சந்தையில் வெளியிட்டார்.
எத்தனை பிரதிகள் விற்றதென்றாள் மாதங்கி.
அத்தனையுமென்றேன்.