கம்பன் கவியமுதம்—41/வளவ. துரையன்

நாட்டு மக்களின் நன்னெறி

நெறி கடந்து பரந்தன நீத்தமே
குறிஅ ழிந்தன குங்குமத் தோள்களே
சிறிய மங்கையர் தேயும் மருங்குலே
வெறியவும் அவர் மென்மலர்க் கூந்தலே [72]

[நெறி=வழி; நீத்தம்=வெள்ளம்; மருங்குல்=இடை; வெறி=வெறி பிடித்தல், வாசனை]]

கோசல நாட்டு மக்கள் பின்பற்றிய வாழ்வு முறை இப்பாடலில் கூறப்படுகிறது.
அந்த நாட்டில் மக்கள் தாம் வாழவேண்டிய நல்ல வழியை விட்டு செல்ல மாட்டார்கள். மழைபெய்து வருகின்ற வெள்ளமே தன் வழியை விட்டுச் செல்லுமாம். அந்நாட்டின் பொருள்கள் யாவும் தம் அடையாளங்களை அழிந்தவை அல்ல; ஆனால் அங்குள்ள மகளிரின் தோள்களில் குங்குமத்தால் செய்த அடையாளம் மைந்தர் தழுவுதலால் அழிந்தனவாம். தானியங்கள், நெற்கதிர்கள் ஆகியவற்றைப் போராகக் குவித்து அவற்றின் மேல் அடையாள முத்திரை இட்டு வைப்பார்கள். யாரேனும் அவற்றை எடுத்தால் அதன் அடையாளக்குறிகள் கலைந்து அழிந்துவிடும்.
அந்நாட்டில் எடுப்பார் இல்லாததால் அந்தக்குறிகள் அழியவே அழியாதாம். அந்நாட்டில் சிறுமை பெற்ற பொருள்கள் எதுவுமே இல்லை. ஆனால் சிறுமைப் பண்பை உடையன மங்கையரின் மெல்லிய இடைகளே ஆகும். வெறி என்பது இங்கு சிலேடையாக ஆளப்பட்டுள்ளது. கொடுமையான வெறிக்குணம் எவரிடத்தும் இல்லை. ஆனால் வாசனை மிக்கவை மங்கையரின் கூந்தலே ஆகும்.