
வெள்ளிவீதியைப் போல….
வெள்ளிவீதியார் என்பவர் சங்க காலத்தில் வாழ்ந்த பெண்பாற்புலவர். அவர் பல அகத்திணைப் பாடல்கள் பாடி உள்ளார். அவர் தன் கணவன் பொருள் ஈட்டப் பிரிந்து சென்ற போது அவன் பிறிவாற்றாமல் அவனைத் தேடிச் சென்றார். இச்செய்தியை மற்றொரு பெண்பாற்புலவரான ஔவையார் பதிவு செய்கிறார்.
தோழியிடம் தலைவி சொல்வது போல் வரும் பாடல் இது.
கணவன் சென்ற பின் உண்ணாமல் அழகிழந்து வாடுவதில் என்ன பொருள் இருக்கிறது?
பிடவைப் பூவுடன் வேங்கை மலர் இருப்பது போல் குட்டிகளுடன் இருக்கும் பெண்புலிக்கு இரையாக மான் கிடைக்குமா என ஆண்புலி இரைதேடும் பாலையில் வெள்ளிவீதி கணவனைத் தேடிச் சென்றது போல் நானும் செல்ல இருக்கிறேன் என்ற அகநானூற்றுப் பாடல் இது.
உவமையாக மற்றொரு புலவரை ஔவையார் குறிப்பிடுவது மிகவும் பாராட்டத்தக்கது.
“ஓங்குமலைச் சிலம்பில்
பிடவுடன் மலர்ந்த
வேங்கை வெறித் தழை
வேறுவகுத் தன்ன
ஊன் பொதி அவிழாக்
கோட்டு உகிர்க் குருளை
மூன்று உடன் ஈன்ற
முடங்கர் நிழத்த,
துறுகல் விடர் அளைப்
பிணவுப் பசி கூர்ந்தென,
பொறி கிளர் உழுவைப்
போழ் வாய் ஏற்றை
அறு கோட்டு உழை மான்
ஆண் குரல் ஓர்க்கும்
நெறி படு கவலை
நிரம்பா நீளிடை,
வெள்ளி வீதியைப்
போல நன்றும்
செலவு அயர்ந்திசினால்
யானே; பல புலந்து,
உண்ணா உயக்கமொடு
உயிர் செலச் சாஅய்,
தோளும் தொல் கவின்
தொலைய, நாளும்
பிரிந்தோர் பெயர்வுக்கு
இரங்கி,
மருந்து பிறிது இன்மையின்,
இருந்து வினை இலனே!”
