முதல் பல்! /சாந்தமூர்த்தி

                                             
                                

“எத்தனை தடவை போன் பண்றது? என்ன புடிங்கிக்கிட்டா இருந்தீங்க?” என்று நெருங்கிய நண்பர் கேட்டிருந்தால் அவர் “ஆமா” என்று தான் சொல்லியிருப்பார். பிடுங்குவது அவர் தொழில். அவர் ஒரு பல் டாக்டர். என் முறை வரும் வரை நான் காத்திருக்கும் போது அவர் நாலைந்து பேருடைய பற்களையாவது பிடுங்கியிருப்பார்.
நாம் இரண்டு தவறுகளைச் செய்கிறோம். வெளிநாடுகளில் ஒருவர் அவருக்கு டாக்டர் அப்பாய்ன்ட்மென்ட் உள்ளது என்றால் பெரும்பாலும் அது டெண்டிஸ்டைக் குறிக்கும். பல் நலத்துக்கு அங்கு அதிக முக்கியத்துவம் உண்டு. “பல் போனால் சொல் போகும்” என்ற பழமொழி வைத்திருக்கும் நாமோ பல் டாக்டரை சந்திப்பது பல்லைப் பிடுங்குவதற்காக மட்டுமே; பற்களின் ஆரோக்கியம் பற்றி ஆலோசனை பெற அல்ல. இன்னொரு தப்பு, பிடுங்குதல் என்ற சாதாரண சொல்லை நாம் பயன்படுத்துவது பெரும்பாலும் ஒருமாதிரியான தப்பான பொருளில். எந்த சொல்லுக்கும் இயல்பில் வண்ணமோ, சுவையோ இல்லை.
நான் அடிக்கடி பல் டாக்டரை சந்திப்பேன் — என் மனைவியின் பல் பிரச்னைகளின் பொருட்டு. எனக்காக ஒரே ஒரு முறை சந்தித்தேன் என் பற்களை சுத்தம் செய்வதற்காக. சுத்தம் செய்த பின் ஏதோ பலம் குறைந்தது போல் உணர்ந்ததால் பிறகு அதைச் செய்யவில்லை.
சில நாட்களாக கடை வாய்ப் பல்லில் வலி. சொத்தைப் பல். அது சில்லறை தாஜாக்களில் சரியாவது போல் தெரியவில்லை. சொத்தைப் பல்லை பிடுங்க டாக்டருக்கு நம் சொத்தை எழுதி வைக்க வேண்டுமா? அது நாம் இருக்கும் நாட்டைப் பொறுத்தது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நண்பர் தன் சொத்தைப் பல்லை பிடுங்க நேர்ந்த போது, அங்கிருந்து கிளம்பி விமானத்தில் பயணம் செய்து சென்னைக்கு வந்து பிடுங்கிக் கொண்டு திரும்பினார். அதிலும் எவ்வளவு மிச்சமானது என்று சொன்னார். குடும்பத்தைப் பார்த்தது போலவும் ஆயிற்று.
பல்லை பிடுங்கிக் கொள்வது என்று நான் முடிவு செய்தேன். டாக்டர் என்ன மறுக்கவா போகிறார்? முதல் அனுபவம். எனவே முதலில் நிறைய பல் பிடுங்கிக் கொண்ட ஒரு அனுபவஸ்தரிடம் ஆலோசனை பெற வேண்டும். அறிவியல் முறைப்படி பல் பிடுங்குதல் பற்றிய எல்லா விபரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை பற்றி அறிய வேண்டும். பல் பிடுங்கிக் கொள்வதில் என் மனைவியை விட பெரிய நிபுணர் இருக்க முடியாது.
இந்த விஷயத்தில் என் மனைவி எனக்கு பயங்கர சீனியர். தன் முதல் பல்லை முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே பிடுங்கிக் கொண்டவர். மன்னார்குடியில் இருந்த அமெரிக்கன் பல் டாக்டரிடம். அப்போது பல் பிடுங்கிய பிறகு குளிர்ச்சியாக எதையாவது குடிக்க சொல்வார்கள். நான் வேலு சர்பத் கடையில் சர்பத் வாங்கிக் கொடுப்பேன். எனக்கு சர்பத் குடிக்க வேண்டிய அவசியமில்லை. சர்பத்தைப் பார்த்தாலே போதும். ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும்.
“ஐஸ் போடாம குடிங்களேன்” என்று மனைவி ஆலோசனை சொன்னார். ஐஸ் போடாமல் சர்பத் குடிப்பது முகத்தின் மீது துணி போர்த்தி விட்டு முத்தமிடுவது போல. நானும் சர்பத் அருந்தினேன் – துணி போர்த்தாமல். இது அடிக்கடி நடக்கும். ஒரு வேளை, சர்பத் குடிப்பதற்காகவே பல் பிடுங்குவது நடக்கிறதா என்று கூட ஐயம் தோன்றும். சேச்சே, அப்படியெல்லாம் இருக்காது.
முன் தயாரிப்புகளோடு ஆட்டோவில் கிளம்பினோம். எனக்கு பல் பிடுங்க வேண்டும், மனைவிக்கு நான்கு பற்கள் கட்ட ஆர்டர் கொடுக்க வேண்டும் என்பது எங்கள் திட்டம். நடுவில் ஓரிடத்தில் ஆட்டோ தயங்கிய போது யாரோ யாரிடமோ, ”எங்கிட்ட வம்பு வச்சுக்காதே. பல்லை கழட்டி கைல குடுத்துருவேன். ஜாக்கிரதை” என்று எச்சரித்துக் கொண்டிருந்தார். சில வேலைகளை பயிற்சி பெற்ற நிபுணர்கள் செய்வதே நல்லது. முடிகிறது என்பதற்காக யாரும் எதையும் செய்து விடக் கூடாது.
யாரிடமும் எதற்காகவும் பல்லைக் காட்டி பழக்கமில்லாததால் தயங்கியவாறே டாக்டரிடம் பல்லைக் காட்டினேன். பல்லில் சொத்தைதான். ஸ்ட்ரோக் வந்த பின் நான் தினமும் எடுத்துக் கொள்ளும் ரத்தத்தை இளகச் செய்யும் மாத்திரையை அன்று எடுத்துக் கொள்ளவில்லை என்று முன் யோசனைப் பெருமையுடன் சொன்னேன்.
டாக்டர் அதை ஐந்து நாட்கள் நிறுத்த வேண்டும். பிறகுதான் பல்லை பிடுங்க முடியும். ஒரு நாள் நிறுத்தினால் போதாது என்றார். நான் நான்கு நாட்கள் கழித்து வர வேண்டும். எனக்கு சிறிது ஏமாற்றமாக இருந்தது. என் மனைவியை பரிசோதித்த டாக்டர் பக்கத்துப் பல் பாதி நுணுங்கிப் போய் விட்டது, மீதியையும் எடுத்த பிறகே புதுப் பல் கட்ட முடியும் என்றார். அவருக்கு மிச்சமிருந்த பாதிப் பல் பிடுங்கப் பட்டது. திருமண மேடையில் நிச்சயித்த மாப்பிள்ளை வெளியேற்றப் படுவதும், திருமணம் பார்க்க வந்த ஒருவர் மாப்பிள்ளையாவதும் நடக்கக் கூடியதுதான்.
நான்கு நாட்களுக்குப் பிறகு மீண்டும் சென்றோம். எனக்கு முன் நாலைந்து பேர் காத்திருந்தனர். இன்றாவது என் ஆசை நிறைவேறுமா அல்லது யாராவது அதைத் தட்டிப் பறித்து விடுவார்களா என்று என்னைப் போல் அவர்களில் யாரும் சஸ்பென்சில் தவித்திருக்க மாட்டார்கள். எனக்கு மட்டும் ஏன்தான் இப்படி ஆகிறதோ? ஒரு சின்ன விஷயம் கூட சிக்கல் இல்லாமல் எனக்கு நடந்ததே கிடையாது. இப்படி லூஸ்தனமாக நினைப்பதைத் தவிர்க்க சில ஜோக்குகளை நினைவு படுத்திக் கொண்டேன்.
ஒரு பல் டாக்டரின் கல்லறை மீதிருந்த வாசகம்: “இந்த இடத்தை நிரப்ப மட்டுமே டாக்டர் ஃபீஸ் வாங்கவில்லை.” ஒரு டாக்டர் தன் பேஷன்டிடம் அவருக்கு உடனடியாக ஒரு ஆபரேஷன் செய்தாக வேண்டும், அதற்கு இருபதாயிரம் ரூபாய் ஆகும் என்றார். நோயாளி பதற, டாக்டர்,” கவலை வேண்டாம். இப்போது 5000 கொடுத்து விடுங்கள். மீதியை மாதம் 1000 வீதம் 15 மாதங்களுக்கு கொடுங்கள்” என்றார். நோயாளி, “என்ன டாக்டர், ஏதோ தவணை முறையில் கார் வாங்குவது போல் சொல்கிறீர்கள்?”என்றார். டாக்டர் குழம்பி,”நான் இன்ஸ்டால்மென்டில் கார் வாங்கப் போவது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.
அங்கே இன்னொரு அறையில் வேறு டாக்டர் இருந்தாலும் இது பல் மருத்துவரின் சொந்தக் கட்டடம். இது வெறும் கற்களைக் கொண்டு கட்டப் பட்டதல்ல; பல்லாண்டுகளாக பிடுங்கப் பட்ட பற்களைக் கொண்டு கட்டப் பட்டது என்று வாக்கியம் கோர்த்துப் பார்த்தேன். உண்மையில் இந்த பற்களை என்ன செய்வார்? பற்கள் மக்காத குப்பைதானே?
டாக்டர் எனக்கு “மரப்பூசி” போட்டார். பி.ஜி.உட்ஹௌஸின் “The Laughing Gas“ நாவலில் பல் டாக்டரால் மயக்கத்துக்கு உள்ளாக்கப் பட்ட ஒரு இளைஞனும், ஒரு சிறுவனும் அடுத்தவர் உடலுக்குள் மாறி புகுந்து விடுவார்கள் என்று கதை போகும். சிறுவனாயிருந்த போது “ராணி”யில் (குடும்பப் பத்திரிக்கை) அப்போதைய என் அபிமான எழுத்தாளர் குரும்பூர் குப்புசாமி இப்படித்தான் மனிதர்களின் கை, இதயம், தலை போன்றவற்றை மாற்றி வைத்து கதை விடுவார்.
பத்து நிமிடங்களுக்குப் பின் என்னை யாராவது அறைந்திருந்தால் நான் மகிழ்ச்சியோடு மறு கன்னத்தைக் காட்டியிருப்பேன். டாக்டர் கையில் ஆயுதத்துடன் நெருங்கியதும் கண்களை மூடிக் கொண்டேன். திறந்த போது அவர் என் பல்லைக் காட்டினார். அது என்ன புத்தரின் பல்லா, பார்த்துப் பரவசப் படவும், வணங்கிப் போற்றிப் பாதுகாக்கவும்?
அன்று முழுவதும் மனைவி சொன்ன எல்லாவற்றையும் மறு பேச்சில்லாமல் கேட்டுக் கொண்டேன். வாய் திறக்க முடியாததால். மறுநாள் வாசிப்பில் இரண்டு மணி நேரம் குறைந்து போனது. நான்கு மணி நேரம் தான் வாசிக்க முடிந்தது.என்னில் ஒரு துளி குறைந்து போனது. அது என் சமநிலையை நுட்பமாக பாதிக்கும்.
முதல் பல் முளைக்கும் போதும் சிரமங்கள் வருகின்றன. முதல் பல் பிடுங்கப் படும் போதும் சிரமம் தருகிறது. இரண்டும் பிறகு மகிழ்வையும் விடுதலையையும் தருகின்றன. எல்லா முதல்களும் அப்படித்தான்.
@@@@@@@

One Comment on “முதல் பல்! /சாந்தமூர்த்தி”

Comments are closed.