ஸ்ரீஆண்டாளுடன்
ஓர் உரையாடல்/-நா.விச்வநாதன்

கூடாரை வெல்லும்
சீர் கோவிந்தா
என்று அரற்றுவாள்
ஆண்டாள் நாச்சி.
மண்டையைக் குழப்பும்
மார்கழிக் காற்றில்
பெருமாள் கோபுர
உச்சியிலிருந்து
விரிந்த பொம்மை
விழுந்து சிதற
கரபுரவென்று
பாடுகிறாள்.
எனக்கு எப்போதும்
பிடித்தம்தான்.
சிக்கலற்ற என்
வாழ்வாதாரத்திற்கு
அவள்காரணம்
என்ற நம்பிக்கை.
சிற்றஞ்சிறுகாலே
என்னும்போது
உடல்புல்லரிக்கும்
பனிவாசத்தோடு.
வீட்டின் முதல்
செம்பருத்திப் பூவில்
அவள்முகம் புலப்படும்
அடியார்க்கில்லை
அவளது பிம்பம்
திருவில்லிப்புத்தூர்
கொண்டையணியோடு.
மக்கள் ஏதேதோ
வழிபாடுகள் செய்து
விரட்டியபோது
அவள் ஆலயம்வராமல்
ககனமார்க்கமாகவே
அலைந்தாள்.
கண்ணனைக்
கண்டுபிடிக்கக்
காதம்போனாலும்
பயனில்லை.
நாச்சியாரின்
விரகச்சூடு
நிரந்தரம்தான்
கோயிலைவிட்டு வெளியேறும் வரை.