சென்ற வாரம்/சோ.தர்மன்

சென்ற வாரம் அரசு கல்லூரி ஒன்றுக்கு இலக்கிய மன்ற விழாவில் உரையாற்றச் சென்றிருந்தேன்.மதியம் சாப்பிட்டு முடித்தவுடன் மாலையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி இருக்கிறது உடன் இருந்து பார்த்து விட்டுச் செல்லுங்கள் என்றார்கள்.எனக்கு வேறு பணிகள் இருந்ததால் கலை நிகழ்ச்சியைப் பார்க்காமல் கிளம்பி வந்து விட்டேன்.இரண்டு நாட்கள் கழித்து துறைத் தலைவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.கலை நிகழ்ச்சிகள் நல்லபடியாக நடந்ததா என்று விசாரித்தேன்.அவர் சொன்ன பதில் என்னை ஆச்சரியப் பட வைத்தது.
“சார்…நிறையப் பையன்க தண்ணியடிச்சிட்டு வந்திட்டான் சார்.கலை நிகழ்ச்சியும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்னு வீட்டுக்குப் போகச் சொல்லிட்டேன் சார்.பொம்பளப் புள்ளைக இருக்குங்க ஒரு பிரச்சினைனு வந்திட்டா சங்கடமில்லையா சார்”என்றார்.நான் அப்பிடியே அதிர்ச்சியில் உறைந்து போனேன்.என்னால் கிரகிக்க முடியவில்லை.
அப்புறம் இரண்டு நாட்கள் கழித்து இன்னொரு ஊரின் அரசுக்கல்லூரி பேராசிரியரை சந்தித்தேன்.மேற்படி விஷயத்தை சொன்னேன்.அவர் சொன்ன விஷயம் அதைவிடவும் அதிர்ச்சியாக இருந்தது.
“சார்…தினமும் ரெண்டு மூனு பையன்க தண்ணியப் போட்டுட்டு வந்து வகுப்புக்குள்ளேயே படுத்துக்கிறான் சார்.நான் தினமும் வெளியே மரத்தடியில் கிளாஸ் நடத்துகிறேன்”என்றார்.பையன்களின் வீட்டுக்கு போன் பண்ணி தகவல் சொன்னால் அதை பெற்றோர்கள் சீரியசாக எடுத்துக் கொள்வதில்லையாம்.சில பெற்றோர்கள் பேராசிரியர்களுடன் சண்டைக்கு வருகிறார்களாம்.பேசாமல் வேலையை விட்டே போயிறலாமானு இருக்கு என்றார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்த ஒரு சம்பவம் .என் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு பார்க் இருக்கிறது.காலையில் நான் அங்கே போய் நேரம் கழிப்பதுண்டு.நான்கு பையன்கள் பார்க்கின் சுவர் ஏறிக் குதித்து குறிப்பிட்ட ஒரு இடத்தில் தங்களுடைய பைக்கூடுகளை வைத்து விட்டு யூனிபார்ம் உடைகளை களைந்து விட்டு மாற்றாக பைக்குள்ளிருந்து சாதாரண கலர் உடைகளை அணிந்து கொண்டு எல்லா உடமைகளையும் அந்த இடத்தில் வைத்து விட்டு மீண்டும் சுவர் ஏறிக் குதித்து போய்விட்டார்கள்.மறுநாளும் அப்பிடியே நடந்தது.
அந்தப் பார்க்கின் காவலாளியை கண்டு பிடித்து இந்த விஷயத்தை சொன்னேன்.சாயங்காலம் வந்து யூனிப்பார்ம் டிரெஸ்ஸை மாட்டிக் கொண்டு பைக்கூட்டை எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள்.சில நேரம் மதியம் சாப்பிட வருவார்கள் என்று சொன்னார்.அவர்களை ஏன் உள்ளே அனுமதிக்கிறீர்கள் என்று கேட்டேன்.நான்கு பேரும் சேர்ந்து இவரை மிரட்டியதையும் ஆயுதங்களைக் காட்டியதையும் பயந்து கொண்டே சொன்னார்.பாவம் ஸ்வீப்பர் வேலை செய்கிற அவர் என்ன செய்வார்.
‌ அந்தப் பையன்கள் அணிந்து வருகின்ற யூனிப்பார்ம் உடையை வைத்து எந்தப் பள்ளிக்கூடம் என்று கண்டு பிடித்து தலைமையாசிரியரை சந்தித்து இந்த விஷயத்தை சொன்னேன்.என் முன்னாலேயே அந்தப் பையன்களின் பெற்றோருக்கு ஃபோன் போட்டு சத்தமாக மைக்கில் நானும் கேட்கும்படி வைத்தார்.பெற்றோர்களின் பேச்சு எனக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.
“யோவ்…அன்னைக்கே சொல்லியாச்சில்ல அப்புறமென்ன ஓயாம போன் போட்டு உசுரை வாங்குறே.அவன் வீட்டை விட்டு வெளியே போனாப் போதும்னு நாங்க இருக்கோம்.அவன் எப்பிடியும் போகட்டும் நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க”

  பேராசிரியர்கள் சொன்னதையும் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் நினைத்துப் பார்த்தேன்.யாரைக் குற்றம் சொல்ல என்று எனக்கு புரியவில்லை.நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்.பட்ஜெட்டில் கல்விக்கு நம் அரசு அதிகப்படியான நிதியை ஒதுக்கி செலவு செய்கிறது.