
கடந்தவாரம் ஜூனியர் விகடனில் ஒரு முக்கியமான செய்தி வந்திருந்தது. ஆந்திராவிலிருந்து சென்னைக்குள் வரும் போதை மருந்துகள், அதன் காரணமாய் அதிகரித்துவரும் குற்றங்கள் இவற்றை விரிவாகத் தொட்டுக் காட்டியிருந்த கட்டுரை.
அதற்கு இரண்டு வாரங்களுக்குமுன் சென்னையில் பரபரப்பாக பேசப்பட்ட இன்னொரு செய்தி ராமாபுரத்தில் 13 வயது சிறுமியை போதை மருந்து பழக்கத்திற்கு உட்படுத்தி நான்கு இளைஞர்கள் தொடர்ந்து தங்களது பாலியல் தேவைகலுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் வாக்குமூலத்தை எந்தப் பத்திரிக்கையும் வெளியிடவில்லை, வெளியிடவும் முடியது. அத்தனை கோரங்கள் நிரம்பிய வாக்குமூலம் அது. இந்த இரண்டு செய்திகளுக்கும் ஒரு முக்கிய இணைப்பு உண்டு – போதை மருந்துகள். போதை மருந்துகள் நாம் சினிமாக்களில் பார்ப்பதுபோல் பணக்காரர்களின் சமாச்சாரம் என்ற மாயைகள் எல்லாம் தகர்ந்து சில வருடங்களாகிவிட்டன.
பத்து ரூபாய்க்குள் மாத்திரைகளாகக் கூட இவை சர்வசாதாரணமாகக் கிடைக்கத் துவங்கிவிட்டன. கொகைன், ஹெராயின், ஸ்டாம்ப், மெத், கஞ்சா , மாத்திரைகளென எல்லா வகையான போதை வஸ்துகளும் இன்று சென்னை மட்டுமில்லாமல் தமிழகத்தின் சிறுநகரங்களில் கூட பாரிய அளவில் பாவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இருபது வயதிற்குக் கீழிருக்கும் இளைஞர்களும் யுவதிகளும் இந்தப் போதைப் பழக்கத்திற்கு பெருமளவு அடிமையாகிக் கொண்டிருப்பதுதான் இப்போது பெரும் அச்சுறுத்தலாய்த் தோன்றுகிறது. எதன் மீதும் பிடிப்பில்லாத எதன் மீதும் பற்றில்லாத ஒரு தலைமுறை நம் கண் முன்னால் உருவாகிக் கொண்டிருக்கிறது. ராமாபுரம் சிறுமி பிரச்சனையை எடுத்துக் கொண்டால் சாதாரணமாக இன்ஸ்டாக்ராமில் புத்தாண்டு வாழ்த்து பகிர்ந்த இளைஞன் அடுத்த ஓரிரு நாட்களிலேயே அந்த சிறுமியை தங்கள் வசப்படுத்தியிருக்கிறான்.
இரண்டு மாதங்களுக்குள் அந்த சிறுமி தொடர்ந்து போதைப் பொருட்களை எடுத்துக் கொள்ளவும் அந்த இளைஞர்களின் பாலியல் சுரண்டல்களுக்கு உள்ளாகவும் செய்திருக்கிறாள். ஒரு சிறுமியை முன்பின் தெரியாத நான்கு இளைஞர்களால் எப்படி இத்தனை வேகமாக தங்கள் வசப்படுத்த முடிந்தது?
இந்த கேள்வியை ஒவ்வொரு பெற்றோரும் கேட்டுக்கொள்ள வேண்டும். சிறுநகரங்களில் இந்தப் போதை மருந்துகளால் பாதிக்கப்படும் இளைஞர்கள் வேகமாக குற்றச் செயல்களை நோக்கி நகரக்கூடியவர்களாய் இருக்கிறார்கள். இளம் வயதில் குற்றச்செயல் செய்கிறவர்களுக்கு துவக்கத்தில் ஒரு சாகச மனநிலை இருக்கிறது, இந்த மனநிலையை உருவாக்குவது போதை பொருட்கள்.
ஒவ்வொரு பருவத்திற்குமான இயல்பான உணர்ச்சிகளை போதைப் பொருட்கள் திசைமாற்றி அகங்காரத்தையும் வெறியையும் விதைக்கிறது. இயல்பாகவே எல்லாவற்றையும் அத்துமீறி எடுத்துக் கொள்ள நினைப்பதோடு அதற்காக குருட்டுத்தனமான துணிச்சல்களோடு இளைஞர்கள் வன்முறையில் இறங்கக் கூடிய சூழல்களும் அதிகரிக்கின்றன.
போதைப் பொருட்கள் அடிப்படையில் வளரிளம் பருவத்தில் ஒருவருக்குள்ளிருக்கும் லட்சியவாதத்தையும் வாழ்வின் மீதான நம்பிக்கையையும் சிதைப்பதோடு வெறுமையை அவநம்பிக்கையை மட்டுமே தருகிறது.
இரண்டு வருடங்களுக்குமுன் மதுரை செய்ண்ட் மேரிஸ் சர்ச்சிற்கு முன்னால் நடந்த படுகொலையின் காணொளியை உங்களில் பலரும் பார்த்திருக்கலாம், கொலை செய்தவர்கள் இருபது வயதிற்கும் குறைவானவர்கள். பகை கொலைக்கான காரணமாக இருந்தாலும் சம்பவத்திற்கான முக்கியத் தூண்டுதல் போதை மருந்துகள்.
தனிமனிதனின் மேல் பெருகும் பொருளாதாரச் சுமைகள் எல்லோரையும் நேரங்காலம் பார்க்காமல் உழைக்க நிர்ப்பந்திக்கிறது. கொரோனாவிற்குப் பிறகான காலத்தில் நிறைய பேருக்கு வேலை ஒரு பிரச்சினையாய் மாறியிருப்பதால் பதற்றங்களும் பாதுகாப்பின்மையும் அதிகரித்திருக்கிறது.
இதனாலேயே வீட்டில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போக, வீட்டிலிருக்கும் குழந்தைகள் தனித்துவிடப்படுகிறார்கள். போதை மருந்துகளை வியாபாரம் செய்யும் கும்பல்களின் முதல் இலக்கு தனித்துவிடப்படும் இந்த சிறுவர் சிறுமியர்தான். உங்களுக்கு வேலை வருமானம் எல்லாம் முக்கியந்தான், ஆனால் அதைவிடவும் உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியமென்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். அரசோ காவல்துறையோ மட்டும் இந்த போதை வளையத்தை முற்றாக உடைத்து இளைஞர்களுக்கு பாதுகாப்பைக் கொடுத்துவிட முடியாது.
தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளைக் கவனமாகக் கையாள வேண்டிய நேரமிது. அவர்களோடு உரையாடவும் நேரம் செலவழிக்கவும் துவங்குங்கள். அவர்கள் சமூக வலைதளங்களில் யாருடன் பழகுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
ராமாபுரம் சம்பவம் ஒரு சிறிய உதாரணம் தான். பொதுவெயில் எழுதமுடியாத ஏராளமான சிக்கல்கள் இன்னுமுண்டு. உங்கள் குழந்தைகளுக்கு ஆடம்பரமான ஒரு வாழ்வைத் தருவதை விட பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தருவது முக்கியம். எனது கதைகளை நாவல்களை எல்லாம் வாசித்துவிட்டு பலரும் ஏன் இத்தனை வன்முறை ? என்று கேட்பதுண்டு.
உண்மையில் நமது சமூகம் என் கதைகளை விட வன்முறை நிரம்பியதாய் இருக்கிறது, தயை கூர்ந்து உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள் என்று சொல்லத்தான் வன்முறையைத் திரும்பத் திரும்ப எழுதுகிறேன். இத்தனை குரூரங்களும் வன்முறைகளும் நிரம்பிய காலத்தில் அதனை உரையாடாமல் ஆற்றங்கரை மரம் அதில் கூவும் குயில் உள்ளொளி நோக்கிப் பயணமென வாசகனை ஹேப்பி எண்டிங் நோக்கி நகர்த்திச் செல்லும் படைப்புகளை ஒருவன் எழுதுக்கூடுமானால் அதுவும் சமூகத்தின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைதான்.
