
இப்போதெல்லாம் யார் யார்தான் ப்ரொபஷனலிஸாம் பற்றி பேசுவது என்று ஒரு கணக்கில்லாமல் போய்விட்டது. ஒரு தொழிலையோ தொழில் நிறுவனத்தையோ தனக்கு ஒரு முகத்தை உருவாக்குவதற்காக பயன்படுத்திக்கொண்டு பிறகு வந்த வேலை முடிந்ததென்று நடையைக் கட்டுவதற்குமுன் உங்களிடம் ப்ரொபஷனலிஸம் இல்லை, அது இல்லை, இது இல்லையென்று அளப்பது குற்றவுணர்வைத்தவிர வேறு எதுவும் இல்லை… என்னுடைய 18 வருஷ பதிப்பு அனுபவத்தில் சுமார் 1000 பிரதிகளையாவது செம்மைப்படுத்தி மேம்படுத்தும் பணிகளில் சம்பந்தப்பட்டிருக்கிறேன். பல எழுத்தாளர்கள், எந்த அளவிற்கு எழுத்தாளனுக்குரிய ப்ரொபஷனலிஸத்தோடு செயல்படுகிறார்கள் என்பதை அறிந்தால் தமிழ் வாசகர்கள் அதிர்ந்து போவார்கள். 10 நாளில் ஒரு நாவல் எழுதி 11ஆவது நாளில் உலகப்புகழ் அடைய வேண்டுமென்று நினைப்பதும், அது நடக்காவிட்டால் அடுத்த நாளே பதிப்பாளரை அறம் பாடுவதும் கேட்டு கேட்டு அலுத்துப்போன பல்லவி. மேலும் 16 வருடங்களில் 16 வகையான தொழில்கள் பார்த்து ஒவ்வொன்றிலிருந்தும் எந்த ப்ரொபஷனலிஸமும் இல்லாமல் கைவிட்டு ஓடி வந்தவர்களும், செய்த வேலைகளிலும் அறமற்ற பல காரியங்களை செய்தவர்களும் இன்று பரிசுத்தமான முகத்தோடு வந்து ப்ரொபஷனலிஸம் பற்றி கற்றுக்கொடுக்கிறார்கள். வணிகத்திற்காக எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமென்றாலும் விற்கலாம் என்றால் அப்படிப்பட்ட ப்ரொபஷனலிஸம் தேவை இல்லை. என்னுடைய ப்ரொபஷனலிஸம் என்பது எந்த எழுத்தாளரின் புத்தகம் விற்கும், விற்காது என்ற அடிப்படையில் அல்ல. நூற்றுக்கணக்கான இளம் எழுத்தாளர்களின் புத்தகங்கள் அச்சிடப்பட்டு உயிர்மை குடோன்களில் குவிந்து கிடக்கின்றன. அதற்காக அந்த எழுத்தாளர்கள் முக்கியமற்றவர்கள் என்று ஆகிவிடாது. அவர்களை வேண்டுமானால் தங்களைத் தாங்களே முன்னிலைப்படுத்தி தங்கள் புத்தகங்களை விற்றுக்கொள்ளத் தெரியாத அப்பாவி எழுத்தாளர்கள் என்று சொல்லலாம். இவர்கள் அர்த்தப்படி ப்ரொபஷனலாக புத்தகத் தொழில் நடத்த வேண்டுமென்றால் அதற்கு நாங்கள் வேறு விதமான புத்தகங்கள் வெளியிட்டிருக்கலாம். ‘ கவிதைத் தொகுப்பைக்கூட பிரசுரிக்க மாட்டோம். விற்காத புத்தகங்களை பிரசுரிக்க மாட்டோம்’ என்று சொல்கிற பதிப்பகங்களிடம் போய் நிற்பதில் இவர்களுக்கு எந்தக் கூச்சமும் இல்லை. ஆனால் இலக்கிய நூல்களை பதிப்பித்ததன் மூலம் எத்தனையோ லட்சங்களை இழந்திருக்கும் பதிப்பகங்களுக்கு இவர்கள் வகுப்பெடுக்கிறார்கள். சில எழுத்தாளர்கள் எனக்கு மனோரீதியாக ஏற்படுத்திய சித்திரவதைகளை வெளியே சொன்னால் இவர்களுடைய முகம் தெரியும். சொல்வதற்கு ஒன்றே ஒன்று தான் இருக்கிறது… எழுதுகோல் தெய்வம், இந்த எழுத்தும் தெய்வம்.
செல்வி
நிர்வாக ஆசிரியர், உயிர்மை
முகநூல் பதிவில் படித்தது
