ஜெயதேவன் கவிதை

என் மேசையிலிருந்த கோப்பை நிரம்பியிருந்தது காற்றால்
என் மனைவி பாதி குவளை
நேநீர் ஊற்றும் வரை
இப்போது என் மேசையில் இருப்பது அரைக்குவளை
வெறும் செடியாய்
இருக்கும்வரை
பூ பற்றிய அவஸ்தை என்னிடமில்லை
அரும்பத் தொடங்கியது
அன்றாடம் மனதை அரிக்கிறது
பூ பற்றிய கவலை
காடுகளாய் இருந்தவரை பயமில்லை
இரண்டொரு வழிப்போக்கர்கள்
தென்பட்டனர்
என் தங்கமோதிரம் பற்றிய பயம்
எனக்கு வந்துவிட்டது
வெறும் மரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்
பல வருடங்களாய்..
குருவி கூடு கட்டியதும்
வந்துவிட்டது முட்டை பற்றிய ஆசை
பைத்தியங்களைப்பற்றி மரியாதை இல்லை என்னிடம்
சில கவிஞர்களைச் சந்தித்த பின்
அவர்களது உளறல்கள் கூட
தெரிந்தன நல்ல கவிதைகளாக
மனிதர்கள் இல்லா தீவில்
எதிரிகள் தென்படவில்லை
அடுத்தடுத்து வீடுகள் உருவானதும்
உருவாயினர் எதிரிகள்
காலிப்படகு மோதியதுபற்றி
கவலைப்படவில்லை இதுவரை
ஓட்டுபவன் இருந்ததும்
உச்சி வெடித்தது கோபத்தில்
நகக்கண்கள் எப்போதும் போல்தான் இருக்கின்றன
கருடன் பூப்போடும் என்றதும்
பூப்பூத்துவிட்டது போலுள்ளது
விரலெல்லாம்
வெட்டவெளியாய் இருந்தவரை
கடவுள் பிறக்கவில்லை
மனிதன் பிறந்த பிறகு
பிறந்துவிட்டான் கடவுளும் கூட