எம் டி முத்துக்குமாரசாமி கவிதை

முக்காலியில் உட்கார்ந்து அவர்
பாடும் குளியலறைப் பாடலில்
பெயரறில்லாப் பறவை
வந்தமர வானம் உள் நுழைகிறது
எளிய சினிமாப் பாடலுக்கு
வானம் எப்படி உள் நுழையுமென
அவர் நண்பர்கள் மூக்கு விடைப்பார்கள்
ஆனாலும் அது அவர்குளியலறை
அவர் நிர்வாணம் சிறு துரும்பாய்
ஒரு சிறு பறவையின் முன்
உட்கார்ந்திருக்கும் கணம்
பூவாளி நீரின் தூய்மைக்கு
ஆட்பட்டு தொடர்ந்து பாடுகிறார்
விசும்பலோடு முன் சென்ற
அவளின் பின்னே காற்றில்
அலையும் கைகள் கைப்பிடி
தேட தவிப்பின் சிறு பறவை
பெயர் கொண்டு வான்
எடுத்துச் செல்லும்
தன் சிறகடிப்பிலென