இனிக்கும் தமிழ் – 116/டி வி ராதாகிருஷ்ணன்

நள வெண்பா

பிரிவு.

காதலன்/காதலி பிரிவு. கணவன்/மனைவி பிரிவு, பெற்றோர் பிள்ளைகள் பிரிவு, நண்பர்கள் பிரிவு …என்று பிரிவு என்பது நம் வாழ்வின் நிகழும் அடிக்கடி நிகழும் சம்பவம்.

பிரிவு துன்பம் தரும்.

அதிலும் காதலன் காதலி பிரிவு ஒரு ஏக்கம், காமம், காதல், பாசம் என்று
எல்லாம் கலந்து ரொம்பவும் படுத்தும் .

நளனை பிரிந்த தமயந்தி தனிமையில் வருந்துகிறாள்.

இரவுப் பொழுது. குளிர்ந்த நிலா. இருந்தும் அவளுக்கு அது சூடாக இருக்கிறது. காமம்.

“இந்த இரவு ஏன் இவ்வளவு சூடாக இருக்கிறது? ஒரு வேளை இந்த நிலவு சூரியனை
விழுங்கி விட்டதா? அதனால் தான் இவ்வளவு சூடாக இருக்கிறதா? இல்லை, என்
மார்பகத்தில் இருந்து எழுந்த சூட்டால் இந்த உலகம் இவ்வளவு சூடாகி
விட்டதா? அல்லது இந்த நிலவின் கதிர் வெப்பத்தை பரப்புகிறதா ? ஒன்றும்
தெரியவில்லையே ” என்று பிரிவில் தவிக்கிறாள்.

பாடல்

வெங்கதிரோன் தன்னை விழுங்கிப் புழுங்கியோ
கொங்கை அனலில் கொளுந்தியோ – திங்கள்
விரிகின்ற வெண்ணிலவால் வேகின்ற தேயோ
எரிகின்ற தென்னோ இரா.

பொருள்

வெங்கதிரோன் = வெம்மையான கதிர்களை உடைய சூரியன்
தன்னை = அவனை
விழுங்கிப் புழுங்கியோ = விழுங்கியதால் இந்த இரவு இப்படி புழுங்குகிறதா ?
கொங்கை = என் மார்பகத்தின்
அனலில் = சூட்டில்
கொளுத்தியோ = கொளுத்தப்பட்டதா?
திங்கள் = நிலவு
விரிகின்ற = பரந்து
வெண்ணிலவால் = வெண்மையான இந்த நிலவால்
வேகின்ற தேயோ = வேர்கின்றதோ
எரிகின்ற தென்னோ இரா. = ஏன் இந்த இரவு எரிகிறது
இரவு சூரியனை விழுங்கி இருக்கும் என்று எப்படிப்பட்ட ஒரு கற்பனை.

                   -