எஸ். சண்முகம் கவிதை

பழைய மின்மாற்றியின் அருகிலுள்ள விளக்குகம்பத்தின் கீழ் நெடுநேரமாக
இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி
எதிரிலுள்ள வீட்டின் வெளிப்புறச் சுவரையே
பார்த்துக் கொண்டிருப்பவரின் தோற்றம்
ஏற்கனவே அறிமுகமுள்ளவரை ஞாபகமுறச் செய்ய
அவர் இதுபோல் சுவரை வெறிப்பவர் அல்ல

அந்த பழைய பாணி சீமைஓடு வேய்ந்திருக்கும் வீட்டின் மூடப்பட்டுள்ள வாசல் கதவை
நான் பார்த்துவிட்டு வேறுபக்கம் திரும்பிய பின்
அவர் வெளிப்புறச் சுவரிடமிருந்து விடுபடவில்லை
கதவில் பூவேலைப்பாட்டின் வளைவுகள்
வார்னிஷ் மெருகின்றி மரத்தின் மெய்நிறம் காட்டுகின்றது

கதவு திறக்கப்படும் போது யார் வசப்படுவாரோ
அதுவரை கதவின் அசையா வடிவம்
வெளிப்புறச் சுவரின்முன் உள்ளவரின் நகராமை
என்னைவிட்டு அகலுமா என்று எதிர்பார்த்திருக்க
நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தின்
குறுக்கே ஒருவர் செல்கிறார்

வாகன இருக்கை காலியாக உள்ளது
அவ்வீட்டின் கதவு வெளிப்புறமிருந்து
உள்பக்கமாக சென்ற ஒருவரோ இருவரோ கதவைமூடுவது தெரிய
வெளிப்புறச் சுவர்மீது கடக்கும்
இருசக்கர வாகனஙகளின் நிழல்கள்.