
தேன்சிட்டு வனம் முழுக்க அலைந்தது
சிநேகிதப் பூக்களிடம் உரையாடியது
திடீரென தேவதையாக மாறிப்போனது
புல்லாங்குழல் கிடக்கிறது
ஊதிய உதடுகளைக் காணவில்லை
கையில் எடுக்கப் பயமாயிருக்கிறது
காற்றேறி போகிறேன்
பாட்டொன்று துரத்துகிறது
அகப்பட்டால் தெரியும் சேதி
கொளுத்தும் வெயில் சுட்டெரிக்கிறது
என் நிழல் என்னை விட்டு ஓடிப்போனது
நிழலற்ற நான் ஈயமாய் உருகுகிறேன்
இந்தப்பூ அழகாயிருக்கிறது
அந்தப்பூ வாசனையாயிருக்கிறது
எதைப் பறிப்பது என்று
அவளுக்கு குழப்பமாயிருக்கிறது.
அன்பு செய்து முட்டாளாகக் கூடாது
பரிவு காட்டி பைத்தியமாக வேண்டாம்
மனிதனாய் இருப்பதே மகோன்னமானது.
திறக்க முனைந்திடு
இறுக்கமாயிருந்தால் உடைத்திடு
அடைபட்டிருப்பதை விட உடைபட்டிருப்பதே மேல்
ஒரு கதவு பிரிக்கிறது
ஒரு கதவு பிணைக்கிறது
கதவுகளே யாவற்றையும் தீர்மானிக்கிறது
பெண்ணுக்கும்
மண்ணுக்கும்
பேரிடர் தீர்வதாயில்லையே
நிரப்புகிறேன்
நிறையவே இல்லை
காலியாகவே இருக்கிறது கோப்பை
உண்டாகுகிறது அழிகிறது
அழிகிறது உண்டாகுகிறது
நீர்க்குமிழி.
