நதியின் பிம்பம்/தங்கேஸ்

அவன் அவளுக்கு லப்டப் சத்தத்தை மட்டுமே
துணையாக விட்டுச்சென்று ஒரு வருடம் ஆகிறது

சென்ற வருடம் திதி கொடுத்த முல்லைப் பெரியாறு
இன்னும் அதே இளம் பச்சை நிறத்தில்
கரையெங்கும் பூத்துகிடக்கும் தும்பை பூக்கள்
நாணற்புற்களின் காலடியில்

ஓடும் நீரை உற்றுப்பார்த்தாள்
உள்ளே முகம் மலர்கிறான்
வாழ்வில் இந்த நொடிக்கு மட்டும் சாவென்பதே இல்லை போலும்

முழு அல்லி இலை போல மிதக்கும் முகத்தை
அப்படியே கைகளில் அள்ளிக்கொள்ளலாமா என யோசிக்கும் வேளையில்
முகத்தை இரையாய் கண்டு உண்ண வருகின்றன அயிரை மீன்கள்

அயிரை மீன்களை விரட்ட கைகளை நீரில் அளைகிறாள்
பிம்பம் களைந்தோடுகிறது
ஓடும் நதியை ஒரு கை அள்ளி உற்றுப்பார்க்கிறாள்
உள்ளங்கைக்குள் நதிக்குள் சுற்றி சுற்றி வரும் சீவன்கள்

நதிக்கு நதியை தாரை வார்த்து விட்டு கரையேறி வருகிறாள்
நெஞ்சில் அவன் பிம்பத்தை சுமந்து கொண்டு