நந்தாகுமாரன்
ஸ்தூல இருளின் சூட்சும சொல்
நாள் நீள இரவில்
சலனச் சொற்களின் சதங்கை ஆட்டம்
தொடர்ந்து மனப் பரண் ஏறுகிறது
எரிநட்சத்திரக் கண்களின்
சம்ஹாரச் சிமிட்டலில்
சாம்பலாகிறது கூதல்
ஒவ்வொரு பனித்துளியாகச் சிதைத்து
வயிற்றின் குரல்வளையை நெறித்து
இன்னும் ஒரு மிடறு நீர் பருக
இடைக்கால விரதம் மேலும் நீடிக்கிறது
இயலாமையின் கோபம் புயலாகும் முன்
அமைதியின் திரிக்கு ஒளியேற்றுகிறது
ஜீரோ வாட்ஸ் நிலவொளி
கண்டும் கொண்டும்
இஷ்டம் போல் சுற்றி வருகிறது
என் ஹெலிகாப்டர் உடல்
இவ்வுலகையும்
அவ்வுலகையும்
நாளை வேறு நாள்
இருளின் கில்லட்டீன்
ஒளியின் தலைகளைக்
கொய்து கொண்டிருக்கிறது
அச்சத்துடன் பார்க்கிறீர்கள்
அறைச் சுவரின் ஆகாயத்தில்
தொங்கும் வௌவால் கனவுகள்
உங்கள் மேலேயே மலம் கழிக்கின்றன
அசைவற்றுக் கிடக்கிறீர்கள்
முருங்கை இலைகளைக் கொணர்ந்து
சிருங்காரக் கோலம் போடுகின்றன
மலத்தின் மேல்
அதே வௌவால்கள்
விடுதலை பெறுகிறீர்கள்
உங்கள் தூக்கத்தின் கடவுளுக்கும்
விழிப்பின் கடவுளுக்கும்
இப்போது போர் துவங்குகிறது
படுக்கையிலேயே நடைப்பயிற்சி செய்கிறீர்கள்
மெல்லோளி மெதுவாகப் பல்லிளிக்கப்
பனிக்குடங்கள் உடைந்து
உங்கள் செல்பேசியின் திரையில்
சூரியன் உதிக்கிறது
ஆனந்தமாகப் பார்க்கிறீர்கள்
நாட்காட்டியில் அன்றைய தினம்
வெற்றுத் தாளாக இருக்கிறது
அந்த வெற்றிடத்தில்
நீங்கள் இப்படி எழுதிக் கொள்கிறீர்கள்
ஏதோ நிகழ்வுகள்
உதிரக் கடலின்
அலைச் சிதறல்களில்
மிஞ்சும் துளி உலகில்
அலகு பாய்ச்சுகிறது
சூரியச் சிச்சிலியின் ஒளி முத்தம்
சீகல் பறவையின் எச்சத்தில்
வெளிச்சமாகும் எரியாத மின்விளக்கு பூத்த
கடற்கரைச் சாலையின்
அந்தி வானின் நிறக்கலவையில்
ஒற்றை வெண்மேகத் தீற்றல்
மழைத் துளிகளின்
பாப்கார்ன் வெடிப்புகளுக்குச்
சில்லிடும் கூரை
பியருக்குள் விழுந்த
பழக் கொசுவின்
இறுதி ஊர்வலம்
இந்த நாளின்
உன் முதல் புன்னகை
ரயில் சக்கரத்தின்
கிராமஃபோன் சுழல் தட்டு
மின்விசிறியின் பங்குச் சந்தைப் பாதையில்
ஓடியாடிப் பாடிக் களைக்கிறது
பூமியில் ஒரு நாள்
கடிகாரத்தின் முடிவிலிக்கு
பலியாகிறது
பாலிசிதாரரின் நியமினிக்கு
இசைத் தட்டுகளும் ஓவியங்களும்
பரிசாகக் கிடைக்கின்றன
ஒவ்வொன்றாக
ஒன்றுமில்லை
என்றானதும்
ஒவ்வொன்றும்
வேறு வேறு
என்றாகிறது
நந்தாகுமாரன்

சுவையான, ஆழமான புதிய கவிதை , நல்ல சொல்லாடலுடன் ! “முடிவிலியில் தொலைகிறது” இது தொலையாது!