இலக்கியமும் இனாமும்/கவிஞர் இளம்பிறை

வணக்கம் நண்பர்களே,

கவிதைகளுடனான பிரிவற்ற காதலின் பொழுதுகளாகச் சற்றேறக்குறைய 35 ஆண்டுகளைக் கடந்திருக்கிறேன். 15 வயதில் வசனங்களாகவே கவிதை எழுதத் தொடங்கி 19ஆவது வயதில் ஒரு சிறிய கவிதைத் தொகுப்பு வெளியிட்டேன். அப்போதிலிருந்தே பெருக்கெடுத்தும், வற்றியும், காய்ந்தும், சீராகவும் வேகமாகவும் என என்னுள் ஓடிக்கொண்டே இருக்கிறது இக்கவிதை நதி. கவிதைகள் எனக்கு எவ்வளவோ பயன்களைத் தந்திருக்கின்றன. நல்ல நண்பர்கள், பெரும் அறிமுகங்கள், வாசிப்பு, பயணங்கள், விருதுகள், மனக்கிளர்வுகள் இப்படியாக … ஆனால், இவைகளுக்குச் சற்றும் குறைவற்ற அவதூறுகள் , துயரங்கள், மன உளைச்சல்கள், ஏமாற்றங்கள் , வஞ்சகங்கள் என இருள் கவ்விய மறுபுறமும் உள்ளதை மறுக்க இயலாது. எந்தத் துறையானாலும் அதில் இரண்டு பக்கங்கள் இல்லாமலில்லை என்பதுதானே எதார்த்த உண்மை. இவை ஒருபுறமிருக்க எழுதுவதால் சிலர் என்னைப் பேசவும் அழைப்பதுண்டு அவ்வப்போது. முதன் முதலில் ஒரு பொங்கல் விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக (1990) என்னைப் பேச அழைத்த நண்பர் தகட்டூர் ரவி ( வேதாரண்யம் அருகில்) நான் பேசி முடித்துப் புறப்பட்டபோது, எப்படியும் எனக்குப் போக்குவரத்து செலவிற்காக 50 ரூபாயாவது கொடுத்து அனுப்ப வேண்டும் என்பதற்காக, நண்பர்களிடமிருந்து அவர்கள் வைத்திருந்த சில்லரைகளை எல்லாம் மெதுவாகப்பேசி வாங்கிக்கொண்டிருந்ததைக் கவனித்தேன். “மைக்செட் காரருக்கு என்ன சொல்றது”, என ரவியிடம் இன்னொரு நண்பர் கேட்டுக்கொண்டிருந்தார். நான் அப்போது ஒரு நர்சரிப்பள்ளியில் மாதம் ரூ150 சம்பளத்தில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் வைத்திருந்த 50 ரூபாயை ரவியிடம் கொடுத்து, “மைக்செட் காரருக்கு கொடுத்தனுப்புங்கள் .நான் அடுத்த வருடம் பேச வரும்போது வாங்கிக்கொள்கிறேன்”, என வந்துவிட்டேன். மன்னார்குடிக் கல்லூரியில் ஒரு போராளியாக படிப்பை முடித்த ரவி இப்போது சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர். இன்றளவும் எங்கள் தோழமை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இப்படித் தொடங்கிய எனது மேடைப்பேச்சஅவ்வப்போது பேச்சாளராகவும் மிக அரிதாக எப்போதாவது தவிர்க்க இயலாத இடங்களில் பேச வைத்துக் கொண்டும் இருக்கிறது என்னை. இரண்டாண்டிற்குமுன் சென்னையிலுள்ள ஒரு புகழ்பெற்ற தனியார் கல்லூரியில் இலக்கிய மன்றத் தொடக்கவிழாவில் சிறப்புரையாற்ற அழைத்தார்கள். பேசுவதற்கென மதிப்பூதியம் கேட்டுப்பழகாத நான் முதன்முறையாக மதிப்பூதியம் வழங்கப்படுமா எனக் கேட்டதும், அவர்கள் சொன்ன மிகச்சிறிய தொகை எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. “ஏன் இவ்வளவு குறைந்ததொகை. எல்லோருக்கும் இப்படித்தான் தருவீர்களா?” என்றதற்கு, “தமிழுக்கெல்லாம் எங்கள் காலேஜ்ல இவ்வளவு தர்றதே பெரிய விசயம். அதுவுமில்லாம நீங்க தமிழ்லதான பேசப்போறிங்க” என்றதும் அழைப்பைத் துண்டித்துவிட்டேன். அரசு கல்லூரி பல்கலைக்கழகங்களில் எல்லாம் கேட்காமலேயே மதிப்பூதியம் கொடுக்கப்படுகிறது என்பதையும் இங்கே நன்றியுடன் குறிப்பிட விரும்புகிறேன் என்றபோதிலும்விவசாயிகள் நிலையோடு எழுத்தாளர்களின் நிலையை நான் அடிக்கடி ஒப்பிட்டுப் பார்ப்பதுண்டு. விவசாயத்தில் விவசாயிகள் மழையிலும் வெய்யிலிலும் நின்று விளைவித்த பொருட்களை அவர்களிடமிருந்து எடுத்து வியாபாரம் செய்பவர்களுக்குத்தானே அதிக லாபம். கஷ்டப்பட்ட விவசாயிகளுக்கு ஏதோ கொஞ்சம் கிடைப்பதைப்போலத்தான் எழுத்தாளர்களின் நிலைமையும் தொடர்கிறது. இணைய வழிக் கூட்டங்கள் எல்லாம் இனாமாகத்தான் பெரும்பாலும். சமீபத்தில் ஓர் இணைய வழிக் கூட்டத்தில் பேச அழைத்தார்கள். சரி எனச் சொல்லிவிட்டேன். நண்பர் கன்னிக்கோயில் ராஜா “எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி இனாமாகவே இலக்கியம் பேசுவீர்கள். பேசுவதற்கு மதிப்பூதியம் எவ்வளவு வழங்குவீர்கள்?” என ஒரு வார்த்தை கேளுங்கள் எனச் சொல்லி நினைவூட்டினார். இவ்வளவு என்றுகூடக் கேட்கவில்லை. எவ்வளவு என்றதுமே மேற்கொண்டு அவர்கள் பேசவில்லை.இதன்வழி நான் ஒரு புதுப்பாடம் கற்றுக்கொண்டேன். பேசப் போக இயலாத சூழலில்,மன ஒருமை இல்லாத நேரங்களில் மதிப்பூதியம் எவ்வளவு என ஒரு வார்த்தை கேட்டால் போதும், அவர்களே தவிர்த்துவிடுவார்கள் என்பதை. . எனக்குப் பரவாயில்லை. பணியில் இருக்கிறேன். சில இலக்கிய நண்பர்கள் பேசப் போகும் கதையைக் கேட்டால் அவ்வளவு சங்கடமாக இருக்கிறது. புத்தகங்களும், இலக்கியவாதிகளின் உரைகளும் மதிப்பிட முடியாத அளவுக்கு மதிப்புமிக்கவை என்பதால்தான் மதிப்பூதியம் தராமலேயே அனுப்பி விடுகிறார்கள் போலும் பல கெட்டிக்கார நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். இந்த நிலை மாறவேண்டும் எழுதுவதற்கும் பேசுவதற்கும் ஊதியமற்ற நிலை தமிழ் எழுத்தாளர்களுக்கான சாபமாக இன்னும் இன்னும் எத்தனைக்காலம்தான்…

23