டாணாக்காரனை ஏன் முக்கியமான படம் என்கிறோம்?/யமுனா ராஜேந்திரன் 

\

ஒரு அமைப்பின் பகுதியாக இருக்கிற ஆயுதமுகாமின் ஈவிரக்கமற்ற பயிற்சிகள், அதனுள் இயங்கும் அதிகாரப்படிநிலை, வெளியுலக மக்களுக்கும் குறிப்பிட்ட ஆயுத அமைப்பிற்கும் உள்ள உறவு, பயிற்சியின்போது முகாம் வாழ்வில் அடங்கிப்போதல் அல்லது கலகம் செய்தல் என்கிற அடிப்படையான விஷயங்களை அடக்கியதால் அது முக்கியமான படம். இந்தப்படத்திற்கு உலக, இந்திய சினிமாவில் முன்னோடிகள் உண்டா? உண்டு எனில் எந்தவகையில் டாணாக்காரன் தனித்துவமான படம்?ஆயுதப் பயிற்சி முகாம் (குறிப்பாக ராணுவம்) வாழ்வு, அதிகார வர்க்கம், கலகம் குறித்த பல கிளாசிக் சினிமாக்கள் உலகில் உண்டு. ஆப்ரிக்கப் படமான Camp de Theoriya , சீனப் படமான The Big Parade , ஹாலிவுட் படங்களான An Officer and A Gentleman, A Few Good Men, Full Metal Jacket, The Hidden life, இந்தியப் படமான Shaurya (Adoption of A Few Good Men) போன்றவை இப்பிரச்சினையை, அனுபவங்களைப் பேசிய படங்கள். காவல்துறை பயற்சியென்பது காக்க காக்க படம் போல உயர்வு நவிலலாக பல இந்திய, தமிழ் படங்களில் உண்டு. இதிலிருந்து வித்தியாசமான, காவல்துறை எனும் அமைப்பற்றிய பல் பரிமாணங்களுடனான விமர்சனத்தை முதன்முதலில் தமிழ்திரையில் ரைட்டர் படம் பேசுகிறது. அடுத்து அதை இன்னும் ஆழ்ந்த தளத்தில் பேசுவதாக டாணாக்காரன் இருக்கிறது. டாணாக்காரனது தீம் அசலான இந்திய, தமிழ் தீம். இந்திய காவல்துறை என்பது ஆங்கிலக் காலனியாதிக்கத்திற்கும் உள்ளூர் அதிகாரவர்க்கத்திற்கும் பிறந்த குழந்தை என்பதுதான் அந்தத் தீம். இந்தக் கருப்பொருளை விவரிப்பதாகவே தமிழக சமூக யதார்த்தத்துடன் கூடிய காட்சியமைப்புகளுடன் டாணாக்காரன் உருவாகியிருக்கிறது. இந்த வகையில்தான் டாணாக்காரனை இந்திய சினிமாவில் காவல்துறை எனும் அமைப்பை அதனது சகல பரிமாணங்களுடனும் பேசும் முன்னோடிப்படம் என்கிறோம்..